திருச்சி சரக டிஐஜி வருண்குமார் குறித்தும் அவருடைய குடும்பத்தினர் குறித்தும், நாம் தமிழர் கட்சியை சேர்ந்தவர்கள் சமூக வலைத்தளங்களில் அவதூறான கருத்துக்களை பதிவு செய்து வந்தனர்.
இதுகுறித்து வருண்குமார் கொடுத்த புகாரின் அடிப்படையில் திருச்சி தில்லைநகர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு நாம் தமிழர் கட்சியின் ஆதரவாளர்கள் சிலர் கைது செய்யப்பட்டனர். அந்த புகாரின் அடிப்படையில் சீமான் உள்ளிட்டோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில் சமூக வலைத்தளங்களில் அவதூறாக பேசியது தொடர்பாக விளக்கம் கேட்டு திருச்சி டிஐஜி வருண்குமார் சார்பில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வருண்குமார் சார்பில் வழக்கறிஞர் முரளி கிருஷ்ணன் என்பவர் திருச்சி குற்றவியல் நீதிமன்றம் எண் 4ல் வழக்கு தொடர்ந்துள்ளார்.
இந்த வழக்கு விசாரணை மூன்று முறை நடைபெற்று உள்ளது. கடந்த முறை சீமான் நேரில் ஆஜராக வேண்டும் என நீதிபதி தெரிவித்து இருந்தார். ஆனால் அவர் இன்று ஆஜராகவில்லை. இன்று (ஏப். 7) 4வது முறை சீமான் நேரில் ஆஜராக வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டு இருந்தார். இந்நிலையில், இன்று நான்காவது முறையாக வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. இதில் டிஐஜி வருண்குமார் நேரில் ஆஜராகினார். சீமான் ஆஜராகாத காரணத்தால் நாளை ஆஜராக வேண்டும் என நீதிபதி விஜயா உத்தரவிட்டுள்ளார்.

திருச்சி நீதிமன்றத்தில் ஆஜராகி விட்டு வெளியே வந்த டிஐஜி வருண்குமார் கூறுகையில்,”ஒவ்வொரு முறையும் நீதிமன்றத்தில் ஆஜராவேன், அதன்படி நீதிமன்றத்தில் இன்றும் ஆஜரானேன். அடுத்து எப்போது ஆஜராக வேண்டும் என தெரிவிக்கின்றனரோ அப்போதும் ஆஜராவேன்” என தெரிவித்தார்.
தொடர்ந்து வழக்கறிஞர் முரளிகிருஷ்ணன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், “வழக்கு விசாரணைக்கு வந்த இன்று சீமான் ஆஜராக வேண்டிய நிலையில் அவர் சென்னையில் நடைபெற்ற விழாவில் கலந்து கொள்ளுவதால் இன்று ஆஜராகவில்லை என அவரது வழக்கறிஞர் தெரிவித்தார். அதனைப் பரிசீலனை செய்த நீதிபதி கடும் ஆட்சேபனைக்கு இடையில் அதனை ஏற்றுக்கொண்டு நாளை கண்டிப்பாக நேரில் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டார்.
நாளை (ஏப். 8) காலை நீதிமன்ற வேலை நேரம் 10:30 மணியளவில் தொடங்கும். அந்த நேரத்தில் அவர் ஆஜராக வேண்டும். நாளை வரவில்லை என்றால் நீதிமன்றம் சட்டத்துக்கு உட்பட்டு என்ன செய்ய வேண்டுமோ அதை செய்வார்கள். அவர் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்பதுதான் எங்கள் நோக்கம். ஆனால் அவர் நீதிமன்றம் ஆஜராகுவதை விடுவித்துக் கொண்டு மற்ற விழாக்களுக்கு செல்கிறார்.
பாடல் எழுதவும், சினிமா பார்க்கவும், மற்ற பொழுதுபோக்கு சம்பந்தமான விழாக்களுக்கு, கல்லூரி விழாக்கள் செல்கிறார். ஆனால் நீதிமன்றத்தை மதிப்பதே கிடையாது. நீதிமன்றத்தின் மாண்பு என்னவென்பது அவருக்கு தெரியாது. என் மீது என்ன வழக்கு இருக்கிறது, எத்தனை வழக்கு இருக்கிறது, நான் பார்த்துக் கொள்கிறேன், அதோட இது ஒன்றுதானே என கூறுகிறார். அவர் நீதிமன்றத்தை மதிப்பதே இல்லை… ஏன் என்பதை அவர்கள் கேட்க வேண்டும்” என தெரிவித்தார்.