வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே கோயிலில் கற்பூரம் ஏற்றிக் காட்டும் போது மரத்தில் இருந்த தேனீக்கள் கலைந்து கொட்டியதில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த பரவக்கல் கிராமத்தில் சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 40). இவர் வெல்டிங் வேலை செய்து வருகிறார். இவர் குலதெய்வம் சாமி கும்பிடுவதற்காக அதே பகுதியில் உள்ள கன்னி கோயிலுக்கு இன்று உறவினர் மற்றும் குடும்பத்தாருடன் சென்றுள்ளார். அங்கு அரச மரத்தின் கீழ் இவர்கள் சாமி கும்பிட்டுக் கொண்டிருந்த போது கற்பூரம் ஏற்றியுள்ளனர். அப்போது அரசமரத்தில் இருந்த தேனீக்கூண்டு கலைந்து தேனீக்கள் ஒட்டுமொத்தமாக இவர்களை துரத்தி துரத்தி கொட்டி உள்ளது. இதில் செந்தில்குமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
மேலும் தேனீக்கள் கொட்டியதால் காயம் அடைந்த 11 பேர் குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். சிகிச்சை பெற்று வருபவர்களை குடியாத்தம் சட்டமன்ற உறுப்பினர் அமுலு விஜயில் நேரில் சென்று அனைவருக்கும் ஆறுதல் கூறினார். தேனீக்கள் கொட்டியதில் ஆறு பெண்கள், ஆறு ஆண்கள் என 12 நபர்கள் காயமடைந்துள்ளனர்