Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் இன்று முதல் மீண்டும் ஆக்சிஜன் உற்பத்தி

0

கொரோனாவால் பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது.

இதையடுத்து தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் உள்ள ஆக்சிஜன் உற்பத்தி நிலையத்தில் ஆக்சிஜன் உற்பத்தி செய்ய சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின் பேரில் நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதன்படி சமீபத்தில் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி தொடங்கியது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆக்சிஜன் உற்பத்தி நிலையத்தில் உள்ள குளிர்விக்கும் பகுதியில் திடீரென பழுது ஏற்பட்டது. இந்த பழுது நீக்கப்பட்டு சோதனை ஓட்டம் நடந்து வந்தது.

இந்த நிலையில் நேற்று திரவ ஆக்சிஜன் உற்பத்தி மீண்டும் தொடங்கியது. இன்று (புதன்கிழமை) முதல் ஆக்சிஜன் டேங்கர் லாரிகளில் ஏற்றப்பட்டு மருத்துவமனைகளுக்கு அனுப்பிவைக்கப்படும் என்று கூறப்படுகிறது.

மேலும் ஸ்டெர்லைட் ஆலை வளாகத்தில் 500 டன் உற்பத்தி திறன் கொண்ட ஒரு பிரிவும், 550 டன் உற்பத்தி திறன் கொண்ட ஒரு பிரிவும் என மொத்தம் 1,050 டன் ஆக்சிஜன் உற்பத்தி திறன் கொண்ட நிலையம் உள்ளது.

இதில் ஒரு உற்பத்தி பிரிவில் முதல்கட்டமாக 35 டன் திரவ ஆக்சிஜன் தயாரிக்கும் பணி நடந்து வருகிறது. இது தவிர கூடுதலாக உற்பத்தி செய்யப்படும் வாயு நிலையில் உள்ள ஆக்சிஜனை அதற்கென உள்ள பிரத்யேகமான பி, டி வகை ஆக்சிஜன் சிலிண்டர்களில் நிரப்பி அனுப்புவதற்கான நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இதற்காக சிலிண்டர்களில் நிரப்பும் வகையில் கட்டமைப்புகளும் ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

தொழில்நுட்ப கோளாறு காரணமாக கடந்த சில நாட்களாக ஆக்சிஜன் உற்பத்தி நிறுத்தப்பட்டிருந்த நிலையில் மீண்டும் தொடங்குகிறது.

Leave A Reply

Your email address will not be published.