வெளிநாட்டுக்கு வேலைக்குச் சென்ற மனைவியை மீட்டுத் தரக்கோரி திருச்சி கலெக்டரிடம் கணவன் கண்ணீர் கோரிக்கை
திருச்சி தென்னூர் ஆழ்வார்தோப்பு பகுதியை சேர்ந்தவர் ஆரிஃப். இவரின் மனைவி சபுரா பீவி கடந்த ஆண்டு ஜீன் மாதம் ஓமன் நாட்டில் உள்ள மஸ்கட் பகுதியில் உள்ள ஒரு வீட்டிற்கு வீட்டு வேலை செய்ய சென்றுள்ளார்.

அங்கு சென்ற நாள் முதலே அந்த வீட்டின் உரிமையாளர்கள் சபுரா பீ யை அடித்து துன்புறுத்தி வந்துள்ளதாகவும் கடந்த ஜனவரி மாதம் 22 ஆம் தேதி சபுரா தன் கணவருடன் தொலைபேசியில் பேசி உள்ளார். அதன் பின் அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை. ஒரு மாதத்திற்கு மேலாக தன் மனைவி எங்கு உள்ளார், எந்த நிலையில் உள்ளார் என தெரியாத நிலையில் தன் மனைவியை வெளிநாட்டு வேலைக்கு அனுப்பிய ஏஜெண்ட்டான திருச்சி மாவட்டம் இனாம் குளத்தூரை சேர்ந்த ரியாஸ் அகமது என்பவரை நாடியுள்ளார். உரிய பதில் அளிக்காத அவர் ஒரு கட்டத்தில் மஸ்கட்டில் உள்ள ஏஜெண்ட்டான லிஸா என்பவரது தொடர்பு எண்ணை தந்துள்ளார். லிஸாவை ஆரிப் அழைத்து பேசிய போது ரூ.3.50 லட்சம் பணம் அனுப்பி வைத்தால் சபுரா பீ யை சொந்த ஊருக்கு அனுப்பி வைப்போம் என தெரிவித்துள்ளார். பணம் கொடுக்க வசதி இல்லாத ஆரிஃப் வெளிநாட்டில் கஷ்டப்பட்டு இருக்கும் தன் மனைவியை மீட்டு தர வேண்டும் என நேற்று திருச்சி மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் நடைபெற்ற குறைதீர்க்கும் கூட்டத்தில் திருச்சி கலெக்டரிடம் மனு அளித்தார்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசி ஆரிஃப், தன் வெளிநாட்டில் மனைவி மிகுந்த இன்னல்களுக்கு ஆளாகி வருகிறார். தற்போது அவர் எங்கிருக்கிறார் என்பதே தெரியவில்லை. அவரை மீட்டு தர திருச்சி மாவட்ட ஆட்சியரும், தமிழக முதலமைச்சரும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்தார்.