Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சியில் 403 கோடி ரூபாய் செலவில் டைட்டல் பார்க் அடிக்கல் நாட்டு விழா.டைடல் பார்க்கில் அமைய உள்ள வசதிகள் முழு விபரம்

0

'- Advertisement -

திருச்சியில் ரூ.403 கோடி  செலவில் கட்டப்பட உள்ள டைடல் பார்க் . இன்று தமிழக முதல்வர் அடிக்கல் நாட்டினார் .

 

தமிழக அரசு மாநிலத்தை தொழில் செய்ய உகந்த மாநிலமாக மாற்றும் நோக்கில் பல்வேறு திட்டங்களை முன்னெடுத்து வருகிறது. சாலை போன்ற உட்கட்டமைப்பை மேம்படுத்துவதோடு, தொழில்நுட்ப நிறுவனங்களுக்காக தொழில் பூங்காக்களையும் அமைத்து வருகிறது. அந்த வகையில் சென்னை, கோயம்புத்தூரை தொடர்ந்து, மதுரை மற்றும் திருச்சியிலும் டைடல் பார்க் அமைக்கப்பட உள்ளது. இதற்கான பணிகளை முதலமைச்சர் ஸ்டாலின் இன்று, தலைமை செயலகத்தில் இருந்தபடியே காணொலி மூலம் தொடங்கி வைத்தார்.

 

திருச்சியில் அமைய உள்ள இந்த டைடல் பூங்கா தொடர்பான முழு விவரங்களும் வருமாறு….

 

​​உலகத்தரம் வாய்ந்த உள்கட்டமைப்பை வழங்குவதற்காக திருச்சியில் டைடல் பூங்கா நிறுவப்படும் என்று, கடந்த ஆண்டு பட்ஜெட் கூட்டத்தொடரின் போது நிதியமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்தார். அதன்படி, தமிழ்நாடு தொழில்துறை மேம்பாட்டுக் கழகம் (TIDCO) மற்றும் தமிழ்நாடு மின்னணுக் கழகம் (ELCOT) ஆகியவற்றின் கூட்டு முயற்சியாக, இரண்டு கட்டங்களாக திருச்சியில் உள்ள பஞ்சப்பூரில் டைடல் பார்க் அமைய உள்ளது. 403 கோடி ரூபாய் செலவில் இந்த வளாகம் சுமார் 5,58,000 சதுர அடி பரப்பளவில் கட்டமைக்கப்பட உள்ளது. டெண்டர் ஆவணங்களின் படி, 18 மாதங்களுக்குள் பணிகள் முடிக்கப்பட்டு டைடல் பார்க் பயன்பாட்டிற்கு வரும். அதாவது அடுத்த ஆண்டு ஜுன் – ஜுலைக்குள், திருச்சி டைடல் பூங்கா பயன்பாட்டிற்கு வரும்.

 

திருச்சியில் அமைய உள்ள புதிய டைடல் பார்க், தரை மற்றும் ஆறு தளங்களைக் கொண்ட பிரமாண்ட மற்றும் அனைத்து வசதிகளையும் உள்ளடக்கிய கட்டடமாக இருக்கும். அதன்படி, சுமார் 5 ஆயிரத்திற்கும் அதிகமான ஊழியர்களுக்கு இடமளிக்கும் வகையில் அலுவலகங்கள், கூட்ட அரங்கம், தரவு மையம், ஃபுட் கோர்ட், வாகன நிறுத்துமிடம் மற்றும் பிற வசதிகள் இடம்பெற உள்ளன.

 

திருச்சி டைடல் பூங்காவிற்காக அடையாளம் காணப்பட்ட இடத்தின் வழியாக செல்லும் இரண்டு நிலத்தடி வடிகால் (UGD) குழாய்களை மாற்றுவதற்காக டைடல் நிர்வாகம் சமீபத்தில் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புக்கு சுமார் 12 கோடி ரூபாய் பணம் செலுத்தியது . அதன் மூலம் டைடல் பார்க் தளத்தைக் கடக்கும் சுமார் 1,730 மீட்டர் நீளமுள்ள கழிவுநீர் குழாய்கள் மாற்றப்படுகின்றன. அதன்படி, தற்போதுள்ள வலுவூட்டப்பட்ட சிமென்ட் கான்கிரீட் (RCC) குழாய்கள் பூங்கா தளத்திற்கு வெளியே மாற்றப்படுகின்றன.

 

திருச்சி-மதுரை தேசிய நெடுஞ்சாலையில், வரவிருக்கும் ஒருங்கிணைந்த பேருந்து நிலையத்திற்கு (IBT) அருகில், 14.16 ஏக்கர் பரப்பளவில் புதிய டைடல் பூங்கா அமையவுள்ளது. வணிக மையமான IBT, விமான நிலையம், ரயில் நிலையம் மற்றும் நகரத்திற்கு அருகாமையில் இருப்பதால், இந்த இடம் இந்த திட்டத்திற்கு ஏற்றதாக கருதப்படுகிறது. போக்குவரத்தும் எளிதாக இருக்கும் என கருதப்படுகிறது. காரணம் இந்த இடம் சென்னை-திருச்சி-மதுரை தேசிய நெடுஞ்சாலையிலிருந்து அணுகக்கூடியது மற்றும் திருச்சி சர்வதேச விமான நிலையத்திலிருந்து சுமார் 12 கி.மீ தொலைவிலும், திருச்சி ரயில் சந்திப்பிலிருந்து 8 கி.மீ தொலைவிலும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

 

நாவல்பட்டில் உள்ள ELCOT ஐடி பூங்காவிற்குப் பிறகு திருச்சியில் அமைக்கப்படும் இரண்டாவது ஐடி பூங்கா இதுவாகும். அண்மையில் அது 1.16 லட்சம் சதுர அடி பரப்பளவிலான கட்டடத்துடன் விரிவுபடுத்தப்பட்டது. புதிய டைடல் பூங்காவின் உருவாக்கம், நகரத்தில் வளர்ந்து வரும் ஐடி மற்றும் ஐடி சார்ந்த சேவை நிறுவனங்களுக்கு ஒரு உத்வேகத்தை அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 இன்று அடிக்க நடப்பட்ட இந்த நிகழ்வில் திருச்சி ஆட்சியர் பிரதீப் குமார் , மாநகர மேயர் அன்பழகன், சட்டமன்ற உறுப்பினர்கள் பழனியாண்டி, சௌந்தரபாண்டியன் ஆகியோர் குத்துவிளக்கு மேலும் நிகழ்ச்சிகள் அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர் .

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.