Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

கடைசியாக திருமணம் செய்த வாலிபரிடம் பணம் நகை கேட்டு மிரட்டிய கல்யாண ராணி கைது .

0

'- Advertisement -

புதுக்கோட்டை மற்றும் கோவையில் இரண்டு வாலிபர்களை திருமணம் செய்து இரண்டு குழந்தைகள் பெற்ற பெண், கரூரில் கொசுவலை கம்பனியில் வேலை பார்த்து வரும் இளைஞரை மூன்றாவது திருமணம் செய்து 12 நாட்களில் அவர்களின் மோசடி அம்பலமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

புது பெண் என ஆசையாக திருமணம் செய்து கொண்ட இளைஞர், தனது மனைவி இரண்டு குழந்தைக்கு தாய் என்றும் தான் மூன்றாவது கணவர் என தெரிந்ததும் அதிர்ச்சி அடைந்து கல்யாண ராணியின் திருமண மோசடிக் கும்பலை போலீசில் பிடித்து கொடுத்தாா்.

கரூர் மாவட்டம், மண்மங்கலம் அடுத்த, புஞ்சை கடம்பக்குறிச்சி பகுதியைச் சேர்ந்தவர் ரமேஷ் (வயது 30). இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தனக்கு திருமண வரன் பார்க்க சொல்லி, கோவையைச் சேர்ந்த ஜெகநாதன், ரோஷினி, தேவகோட்டையைச் சேர்ந்த பாலகுமார் ஆகியோரிடம் கூறியுள்ளார். இந்த நிலையில், இவர்களின் ஏற்பாட்டின் பேரில், கடந்த மாதம் 12-ம் தேதி கரூர் மண்மங்கலத்தில் உள்ள பெருமாள் கோவிலில் கோவை, ராமநாதபுரம், போத்தனூர் சாலையைச் சேர்ந்த ரேணுகா (36) என்பவரை திருமணம் செய்து வைத்துள்ளனர்.

திருமணத்தின் போது 6- பவுன் தாலிக்கொடி, ஒரு பவுன் தங்கத்தோடு, அரை பவுன் மோதிரம் மற்றும் ரூ. 4 லட்சம் செலவு செய்து ரேணுகாவை திருமணம் செய்துள்ளார்.

இந்த திருமணத்திற்கு ரேணுகாவின் மற்றொரு அண்ணன், அவரது மனைவி, ரேணுகாவின் தங்கை என்று சொன்ன நந்தினி ஆகியோர் வந்ததாக கூறப்படுகிறது. திருமணம் நடந்த மறுநாளே புதுமணப் பெண்ணான தனது மனைவி ரேணுகாவின் உடலில் சில மாற்றம் இருந்ததை கண்ட ரமேஷ்க்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து ரேணுகாவிடம் கேட்ட போது, அவர் எதோ சொல்லி மழுப்பியுள்ளார்.

இருந்த போதும், ரமேஷ்க்கு சந்தேகம் வலுத்துள்ளது. தொடர்ந்து கண்காணித்து வந்துள்ளார். இந்த நிலையில், சில தினங்களுக்கு முன்பு ரேணுகாவிற்கு வந்த அலைபேசியை எடுத்து ரமேஷ் எதேச்சையாக பேசும் போது, பழனிகுமார் என்பவர், ரேணுகா என நினைத்து, பணம் நகைகளை எடுத்து வருவதாக கூறி இன்னும் ஏன் எடுத்து வரவில்லை என கேள்வி எழுப்பியுள்ளார்.

அப்போதுதான், ரேணுகாவிற்கு புதுக்கோட்டையை சேர்ந்த மெய்யர் என்பவருடன் திருமணம் நடந்து இவர்களுக்கு, ஒரு மகளும், மகனும் உள்ளதாகவும், பின்னர், பழனிகுமாருடன் 3- வருடம் தொடர்பில் இருந்து விட்டு, கோவை ராஜ், முபாரக் ஆகியோருடன் ஒருவருடம் தொடர்பில் இருந்து, பின்பு கோவையை சேர்ந்த லோகநாதன் என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டு, சில நாட்களில் அவரது பணம், நகைகளை எடுத்து வந்து விட்டதாகவும், அதே புரோக்கர்கள் மற்றும் திருமண மோசடி கும்பல் மூலம் கல்யாண ராணியிடம் (ரேணுகா) ரமேஷ் ஏமாந்தது தெரிய வந்துள்ளது.

அதன் பிறகு, ரேணுகாவின் செல்போனை சோதனை செய்து தேடிய போது, கல்யாண ராணியின் (ரேணுகா) இரண்டாவது திருமணம் செய்து கொண்டதற்கான புகைப்பட ஆதாரங்கள் இருப்பது தெரிய வந்துள்ளது. இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த ரமேஷ் போலீசில் புகார் அளிக்க முடிவு எடுத்துள்ளார்.

இதை தெரிந்து கொண்ட, கல்யாண ராணி ரேணுகா, ரமேஷ் போட்ட தங்க நகைகளை எடுத்துக் கொண்டு வீட்டை விட்டு தப்பி ஓடி உள்ளார்.

திருமண மோசடி கும்பலில் ஒருவரான ஜெகநாதன் என்பவர் அலைபேசியில் ரமேஷை தொடர்பு கொண்டு ரூ. 20 லட்சம் பணமும், 20 பவுன் நகையும் கொடுத்து விட்டால் பிரச்சனை ஏதும் செய்யாமல் விலகிக் கொள்வதாகவும், இல்லாவிட்டால் உன்னை வேறு திருமணம் செய்ய விடமாட்டோம், நீ வரதட்சனை கேட்டு கொடுமை செய்ததாக புகார் அளிப்போம் என்று தகாத வார்த்தையில் பேசி, கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.

இதைக் கேட்ட ரமேஷ் உடனடியாக கரூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதிரடியாக களம் இறங்கிய மகளிர் போலீசார் கரூர் பேரூந்து நிலையம் மற்றும் ரயில் நிலையத்தில் தேடினர். அப்போது, கோவை செல்ல கரூர் பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்த ரேணுகாவை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

மேலும், ரேணுகாவிடம் நடத்திய விசாரணையில் கிடைத்த தகவலை கொண்டு திருமண மோசடி கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.

நகை, பணத்திற்காக பலரையும் ஏமாற்றிய கல்யாண ராணி (ரேணுகா) கைது செய்யப்பட்ட சம்பவம் கரூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.