வாடகை கடைகளுக்கு 18% வரி விதிப்பை எதிர்த்து திருப்பூரில் இன்று ஒரு லட்சம் கடைகளை அடைப்பு. ரூ.100 கோடி வணிகம் பாதிப்பு.
வாடகை கடைகளுக்கு 18% ஜிஎஸ்டி விதிக்கப்படுவதாக சமீபத்தில் மத்திய அரசு அறிவித்தது. இந்த அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து திருப்பூரில் இன்று 1 லட்சம் கடைகள் அடைக்கப்பட்டிருக்கின்றன.
இதனால் ரூ.100 கோடி அளவுக்கு வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் வேலைவாய்ப்பு பெரிய பிரச்னையாக வெடித்திருக்கிறது. பல ஆயிரம் கோடி கணக்கில் லாபம் பார்க்கும் நிறுவனங்கள் உருவாக்கும் வேலைகளை விட, எம்எஸ்எம்இ எனப்படும் சிறு,குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் உருவாக்கும் வேலை வாய்ப்புகளே அதிகமானதாக உள்ளன. இப்படி இருக்கையில், வாடகை கட்டிடங்களில் இயங்கி வரும் நிறுவனங்களுக்கு 18% ஜிஎஸ்டி வரி விதிக்கப்படும் என்று மத்திய அரசு கூறியிருந்தது. கடந்த செப்டம்பர் 23-ல் கூடிய ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில்தான் இந்த முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது.
இதற்கு வியாபாரிகள் சங்கத்தினர் மட்டுமல்லாது பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். அதாவது, பாஜக தலைமையிலான மத்திய அரசு பொறுப்பேற்றதிலிருந்தே பெரும் கார்ப்பரேட்டுகளுக்கு சலுகைகளை வாரி வழங்குவதையும், சிறு – குறு தொழில் முனைவோர் மற்றும் சிறு வணிகர்களுக்கு விரோதமான நடவடிக்கைகளை அமலாக்குவதையும் வாடிக்கையாகக் கொண்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக, வாடகை கடைகளை நடத்தி வரும் சிறு வணிகர்கள் கடை வாடகை தொகையில் 18 சதவீதம் ஜிஎஸ்டி வரியை இனி ஒவ்வொரு மாதமும் செலுத்த வேண்டும் என உத்தரவிட்டிருக்கிறது.
மத்திய அரசு எடுத்துள்ள இந்த முடிவு மிக மோசடியானது மட்டுமின்றி, வாடகை இடத்தில் வாணிபம் செய்யும் ஏழை, நடுத்தர வணிகர்கள் மீது தொடுத்துள்ள மோசமான தாக்குதலாகும். ஏற்கெனவே கடுமையாக பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் சிறு வணிகர்களை மேலும் மோசமான நிலைக்கு தள்ளிவிடுகிற ஆபத்தை கொண்டதாகும் என அரசியல் தலைவர்கள் விமர்சித்துள்ளனர்.
கார்ப்பரேட் நிறுவனங்களின் வரியை 30 சதவீதத்திலிருந்து 22 சதவீதமாக குறைத்துள்ள மோடி அரசு, சிறு வணிகர்கள் நடத்தும் கடை வாடகைக்கும் 18 சதவீதம் ஜிஎஸ்டி விதித்துள்ளது சிறு வணிகர்களை முற்றாக சீரழித்து, இத்தொழிலில் ஈடுபட்டுள்ள சிறு வணிகர்கள் மீது தொடுக்கப்பட்ட கொடூரத் தாக்குதலாகும். மத்திய பாஜக அரசின் இந்த முடிவை வன்மையாக கண்டிப்பதோடு, உடனடியாக திரும்ப பெற வேண்டும் என்றும் அவர்கள் வலியுறத்தியுள்ளனர்.
கடந்த வாரம் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் வணிகர் சங்க பேரவை சார்பில் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் பங்கேற்றிருந்த ஆயிரத்திற்கும் மேற்பட்டோர், ஜிஎஸ்டிக்கு எதிராக கண்டனம் தெரிவித்து முழங்கினர்.
இந்த நிலையில் வாடகை கடைகளுக்கு 18% ஜிஎஸ்டி விதிக்கப்படும் என்கிற அறிவிப்புக்கு எதிராக இன்று திருப்பூரில் வணிகர்கள் கடையடைப்பு போராட்டத்தை தொடங்கியுள்ளனர். சுமார் 1 லட்சம் கடைகள் வரை அடைக்கப்பட்டிருக்கின்றன. இதனால் ரூ.100 கோடி வரை வணிகம் பாதிக்கப்பட்டிருப்பதாக சொல்லப்படுகிறது.
ஜிஎஸ்டி குறித்து வணிகர்கள் கூறுகையில், “சிறு குறு மற்றும் நடுத்தர தொழில்கள்தான் வாடகை கட்டிடங்களில் இயங்கி வருகின்றன. சாதாரணமாக ரூ.20,000 கடை வாடகை செலுத்துகிறோம் எனில் 18% ஜிஎஸ்டி என்றால் கூடுதலாக ரூ.3,200 செலுத்த வேண்டும். திருப்பூரில் ஏற்கெனவே பின்னலாடை தொழில்கள் நலிந்து வருகின்றன. சர்வதேச போர், மூல பொருட்களின் விலை ஏற்றம் போன்றவை இந்த பாதிப்புகளுக்கு காரணமாக இருக்கிறது. இச்சூழலில் மத்திய அரசு எங்களுக்கு உதவ வேண்டும். ஆனால் வரியை உயர்த்தியுள்ளது.
தமிழ்நாடு முழுவதும் சுமார் 42 லட்சம் கடைகள் வாடகை இடத்தில் இயங்கி வருகின்றன. இவைகளில் பெரும்பாலானவை ரூ.1.5 கோடிக்கு கீழ் வர்த்தகம் செய்யக்கூடியவையாகும். இவர்களின் வயிற்றில் அடிக்கும் விதமாக கடை வாடகைக்கு ஜிஎஸ்டி வசூலிப்பது பொருத்தமானது கிடையாது” என்று கூறியுள்ளனர்.