Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

விஜயதாரணிக்கு விஜய் வசந்த் விட்டுக்கொடுப்பாரா என எதிர்பார்ப்பு ?

விஜயதாரணிக்கு விஜய் வசந்த் விட்டுக்கொடுப்பாரா என எதிர்பார்ப்பு ?

0

சென்னை: கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி இடைத்தேர்தலுக்கான களப்பணிகளை தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி நேற்று தொடங்கி வைத்துள்ளார்.
மேலும், வேட்பாளர் தேர்வை பொறுத்தவரை விஜயதரணி மற்றும் விஜய் வசந்த் ஆகிய இருவரது பெயர்கள் மேலிடத்தின் பரிசீலனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
20 ஆண்டுகளுக்கு மேலாக எம்.பி.யாக வேண்டும் என்ற கனவில் உள்ள விஜயதரணிக்கு விஜய் வசந்த் இந்த முறை விட்டுக்கொடுப்பாரா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
கன்னியாகுமரி தொகுதி எம்.பி.யாக இருந்த வசந்தகுமார் அண்மையில் மரணமடைந்ததால் அந்த தொகுதி காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டது
மேலும், வரும் பிப்ரவரிக்குள் கன்னியாகுமரி இடைத்தேர்தலை நடத்தி முடிக்க தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது. இதனால் இப்போதே பாஜகவும், காங்கிரசும் போட்டி போட்டுக் கொண்டு தேர்தல் பணிகளை தொடங்கிவிட்டன.
விஜயதரணி கடந்த 20 ஆண்டுகளாக அதாவது 4 தேர்தல்களில் எம்.பி.சீட் கேட்டு போராடி வருகிறார். அதனால் இந்த முறை எப்பாடு பட்டேனும் சீட் வாங்கி எம்.பி.யாக வேண்டும் என்பதில் மிக உறுதியாக நிற்கிறார் அவர். இதன் காரணமாகவே காங்கிரஸ் நிகழ்ச்சிகளுக்கு அழகிரி அழைத்தாலும் சரி அழைக்காவிட்டாலும் சரி என அட்டனென்ஸ் போட்டு வருகிறார். மேலும், விஜய் வசந்துக்கு இன்னும் வயது இருப்பதால் அவருக்கு வருங்காலத்தில் வாய்ப்பு கொடுக்குமாறு காங்கிரஸ் தலைமையிடம் உருகி வருகிறார்.
இதனிடையே விஜய் வசந்தை பொறுத்தவரை எம்.பி. சீட் பெற்று தேர்தலில் நின்றே ஆக வேண்டும் என நினைக்கவில்லை. கட்சி வாய்ப்புக் கொடுத்தால் தட்டாமல் போட்டியிடும் திட்டத்தில் மட்டும் இருக்கிறார். இதனிடையே நாடார் சமுதாயப் பிரமுகர்கள் சிலர் விஜய் வசந்தை களமிறங்குமாறும், விஜயதரணிக்கு விட்டுக்கொடுக்க வேண்டாம் எனவும் அவரிடம் கூறி வருகின்றனர்.
தமிழக காங்கிரஸ் கமிட்டியை பொறுத்தவரை விஜயதரணி, விஜய் வசந்த் ஆகிய இருவரது பெயர்களையும் மேலிடத்தின் பரீசிலனைக்கு அனுப்பியுள்ளன. எதிர்முகாமில் பாஜக சார்பில் பொன்னார் நிறுத்தப்படுகிறாரா அல்லது வேறு வேட்பாளர் நிறுத்தப்படுகிறாரா என்பதை பொறுத்து காங்கிரஸ் தரப்பில் வேட்பாளர் யார் என்று முடிவெடுக்கக்கூடும் எனத் தெரிகிறது.

Leave A Reply

Your email address will not be published.