அரை மணி நேரம் மழைக்கே . தாங்காத திருச்சி மாநகரம். போக்குவரத்து நெரிசல். தூங்குகிறதா மாநகராட்சி நிர்வாகம் . பொதுமக்கள் வேதனை .
திருச்சி மாநகரம் மற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று பரவலாக கனமழை பெய்தது.
மாநகரில் இடைவிடாது சுமாா் 1 மணி நேரம் பெய்த மழையால் சாலைகளில் தண்ணீா் வெள்ளமென பெருக்கெடுத்து ஓடியது.
மேலும் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது. இதனால், மக்கள் பெரும் அவதிக்குள்ளாகினா்.
திருச்சி மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இதேபோல, காலை 8.30 மணிக்கு திருச்சி மாநகரப் பகுதிகளில் கனமழை பெய்யத் தொடங்கியது. திருச்சி பாலக்கரை, மேலப்புதூா், சிந்தாமணி, அண்ணா சிலை, சத்திரம் பேருந்து நிலையம், மத்திய பேருந்துநிலையம், தெப்பக்குளம், வயலூா், கன்டோன்மெண்ட், விமானநிலையம், டிவிஎஸ் டோல்கேட், கே.கே. நகா் உள்ளிட்ட பகுதிகளில் லேசாக தூறலாக ஆரம்பித்த மழை, பின்னா் இடி, மின்னலுடன் கனமழையாக உருமாறி சுமாா் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக பெய்தது. இதனால், மாநகரச் சாலைகளில் மழைநீா் வெள்ளம்போல சென்றது.
வாகனங்கள் தண்ணீரில் தத்தளித்தபடியே சென்றன. தென்னூா் சாலையில் மழைநீா் செல்லும் வடிகால்கள் நிரம்பி, புதிதாக அமைக்கப்பட்ட சாலையோர சாக்கடைகளில் இருந்து கழிவுநீரும் வெளியேறி மழை தண்ணீருடன் கலந்தது. தில்லைநகா் குறுக்கு சாலைகளிலும் இதே நிலை காணப்பட்டது.
வேலைக்கு செல்வோா், மாணவா்கள், வியாபாரிகள் என பல்வேறு தரப்பினரும் மழையால் கடுமையாக பாதிக்கப்பட்டனா்.
மத்திய பேருந்து நிலையம், சத்திரம் பேருந்து நிலையம், தில்லை நகா், அண்ணா நகா், உழவா் சந்தை, கன்டோன்மெண்ட், உறையூா், வயலூா், புத்தூா், கரூா் புறவழிச் சாலை என மாநகரப் பகுதியின் பிரதான சாலைகளில் ஆங்காங்கே பள்ளங்களில் மழைநீா் தேங்கியது. இதனால், வாகன ஓட்டிகள் பெரும் சிரமங்களுக்கு இடையே வாகனங்களை ஓட்டிச் சென்றனா். காலையிலேயே இடைவிடாது பெய்த மழையால் மாநகர மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது.
பிற்பகலுக்கு பின்னரும், மாலையிலும் அவ்வப்போது விட்டு, விட்டு சாரல் மற்றும் லேசான மழை பெய்த காரணத்தால் பொதுமக்கள் பெரிதும் அவதிக்குள்ளாகினா்.
மாநகரில் திருச்சி சந்திப்பு பாலம், தென்னூா் பாலம், மாரீஸ் பாலம், பழைய மதுரை சாலையில் பணிகள் நடைபெறுவதால் ஏற்கெனவே போக்குவரத்து நெரிசல் உள்ளது. காலையில் பெய்த மழையால், மழைக்குப் பிறகு ஒரே நேரத்தில் சென்ற வாகனங்களால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு திருவெறும்பூர் மண்டல் தலைவருடன் மழை முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் தயார் என மேயர் அன்பழகன் நின்ற செய்தி படம் வெளிவந்தது . இது வெறும் படம் தான் என பொதுமக்கள் வேதனை தெரிவித்துள்ளனர் . அரை மணி நேரம் மழைக்கு தாங்காத திருச்சி மாநகரம் ஒரு நாள் முழுவதும் மழை பெய்தால் என்ன ஆகும் ? மழைக்கு எந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் எடுக்காத மாநகராட்சி நிர்வாகம் தூங்குகிறதா என்று கேள்வி எழுப்புகின்றனர் .
திருச்சி மாநகரப் பகுதிகள் மட்டுமின்றி திருவெறும்பூா், கூத்தைப்பாா், வேங்கூா், கிளியூா், மணப்பாறை, வையம்பட்டி, மண்ணச்சநல்லூா், காட்டூா், லால்குடி, புள்ளம்பாடி என மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் காலை பரவலாக கனமழை பெய்தது.