பழநி பஞ்சாமிர்தம் குறித்து அவதூறு கருத்து பரப்பியதாக திரௌபதி பட இயக்குநர் மோகன் ஜி-யை தட்டி தூக்கிய திருச்சி எஸ்.பி. தனிப்படை போலீசார் .
திருச்சி: பழநி பஞ்சாமிர்தம் குறித்து அவதூறு கருத்து பரப்பியதாக த திரௌபதி பட இயக்குநர் மோகன் ஜி-யை திருச்சி போலீஸார் கைது செய்துள்ளனர்.
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்களுக்கு வழங்கப்படும் லட்டு பிரசாதத்தில் விலங்கு கொழுப்பு கலந்த நெய் பயன்படுத்தப்படுவதாக புகார் எழுந்தது. இது நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், இதுகுறித்து திரௌபதி திரைப்பட இயக்குநரும் பாமக பிரமுகருமான மோகன் ஜி, தனியார் செய்தி சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், தமிழகத்தில் பழநி அருள்மிகு தண்டாயுதபாணி கோயிலில் தயாரிக்கப்படும் பஞ்சாமிர்தம் குறித்து சில கருத்துகளை தெரிவித்திருந்தார். பழநி பஞ்சாமிர்தத்தில் கருத்தடை மருந்துகளை பயன்படுத்துவதாகவும், ஆனால் அதற்கு போதிய சாட்சிகள் இல்லை என்றும் தனது பேட்டியில் அவர் தெரிவித்திருந்தார்.
முன்னதாக, பழநி கோயிலில் பஞ்சாமிர்த தயாரிப்புக்கு ஆவின் நெய் மட்டுமே பயன்படுத்தப்படுவதாகவும், இதில் எவ்வித சந்தேகத்துக்கும் இடமில்லை எனவும் தமிழக இந்து சமய அறநிலையத் துறை விளக்கமளித்திருந்தது.
இந்தநிலையில், பழநி கோயிலில் வழங்கப்படும் பஞ்சாமிர்தம் குறித்து இயக்குநர் மோகன் ஜி அவதூறாக கருத்துகளை பரப்பி வருவதாக புகார்கள் எழுந்தன. இதுதொடர்பாக திருச்சி, பழநி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் போலீஸாரிடம் புகார் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வீ.வருண்குமார் உத்தரவின் பேரில், சென்னை ராயபுரத்தில் தங்கி இருந்த இயக்குநர் மோகன்ஜியை கைது செய்வதற்காக திருச்சி எஸ்.பி தலைமையிலான தனிப்படை போலீஸார் சென்னை விரைந்தனர். அவர்கள் இன்று (செப்.24) காலை சென்னையில் மோகன் ஜி-யை கைது செய்து விசாரணைக்காக திருச்சிக்கு அழைத்து வருகின்றனர் .