பள்ளி தாளாளரிடம் மிரட்டி பணம் கேட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி பிரமுகர் மீது திருச்சி கலெக்டரிடம் புகார் .
தனியார் பள்ளி தாளாளரிடம் பணம் கேட்டு மிரட்டுவதாக விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகி மீது திருச்சி நடவடிக்கை எடுக்கக்கோரி ஆசிரியர்கள் பெற்றோர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு புகார்.
திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காஜாமலையில் அமைந்துள்ள அல்-ஜெமியாதுஸ் சாதிக் தனியார் பள்ளியின் தாளாளர் அஹமதுல்லா கொடுத்த புகாரில் கூறியிருப்பதாவது:-
சாகுல் ஹமீது என்பவரின் மகன் அப்துல்லா என்பவர் எனது பள்ளியின் அருகில் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். மேலும் அப்துல்லாவின் குழந்தைகளும் எங்களுடைய பள்ளியில் படித்து வருகின்றனர். இந்நிலையில் அப்துல்லா தான் வி.சி.க கட்சியில் முக்கிய பதவியில் இருப்பதாகவும் தனது கட்சிக்கு நிதி வழங்க வேண்டும் எனவும் என்னை தொடர்பு கொண்டு மிரட்டும் வகையில் பணம் கேட்டார்.
நான் அவருடைய நடவடிக்கைகள் சரியில்லாத காரணத்தினால் நிதி தர மறுத்து விட்டேன். எனவே அப்துல்லா என்னிடம் “நிதி கொடுக்க முடியாதா என் ஏரியால உன்னால ஸ்கூல் நடத்த முடியுமா” உன்னை பார்த்து கொள்கிறேன் என மிரட்டினார். இந்நிலையில் கடந்த 15.09.2024-ம் தேதி ஞாயிற்று கிழமை பள்ளி விடுமுறை நாள் என்பதால் பள்ளியின் பாதுகாவலர் ரியாஸ் அலி என்பவர் வழக்கம் போல பள்ளியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தார்.
அப்போது அப்துல்லாவின் தூண்டுதலின் பேரில் அப்துல்லாவின் குழந்தைகளும், அவருடைய உறவினர் குழந்தைகளும், பாதுகாவலர் மோட்டார் போட பள்ளிக்குள் சென்ற சமயத்தில் பள்ளியின் கதவை அனுமதியின்றி திறந்து அத்துமீறி பள்ளிக்குள் சென்று தண்ணீரை திறந்து விட்டு விளையாடி கொண்டிருந்துள்ளனர்.
சிறுவர்கள் பள்ளியின் உள்புறம் இருப்பதை கண்டவுடன் காவலாளி ரியாஸ் அலி அவர்கள் அவர்களை அழைத்து வெளியில் அனுப்பியுள்ளார். மேற்கண்ட நிகழ்வுகள் அனைத்தும் சுமார்.1 நிமித்தில் நடந்து முடிந்துள்ளது. பின்னிட்டு சிறிது நேரத்தில் அந்த குழந்தைகளுடன் வந்த அப்துல்லா காவலாளி ரியாஸ் அலியை மிகவும் ஆபாசமான வார்த்தைகளினால் மிரட்டி, கிரிக்கெட் மட்டையால் அடிக்க முயற்சித்து கொலைமிரட்டல் விடுத்து சென்றுள்ளார்.
மேற்கண்ட இந்த நிகழ்வுகள் அனைத்தும் பள்ளியில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. காவலாளி ரியாஸ் அலி கே.கே.நகர் காவல் நிலையத்தில் அப்துல்லா மீது புகார் கொடுத்துள்ளார். புகாரின் கீழ் கே.கே.நகர் காவலர்களும் பள்ளி சி.சி.டி.வி கேமரா பதிவுகளை ஆராய்ந்து விசாரணை செய்து வருகின்றனர்.
புகாரின் பேரில் விசாரணைக்கு ஆஜரான அப்துல்லா என்னை பார்த்து “விரைவில் காஜாமலை பகுதியில் ஒரு கொலை சம்பவம் வரலாறு பேசும்படி நடக்க போகிறது” என கொலைமிரட்டல் விடுத்து சென்றுள்ளார். மேலும் பள்ளியில் பயிலும் பிற மாணவர்கள், அவர்களின் பெற்றோர்கள் மற்றும் பள்ளியில் பணிபுரியும் ஆசியர்கள் ஆகியவர்களையும் தொடர்ந்து மிரட்டுவதும், ஆபாசமாக பேசுவதுமாக அப்துல்லா செயல்பட்டு வருவதோடு. பள்ளியில் தீ வைத்து எரித்துவிடுவதாக மிரட்டி வருகின்றார்.
இந்நிலையில் அப்துல்லா சில வி.சி.க பிரமுகர்களுடன் சேர்ந்து கொண்டு எனது பள்ளியில் அவரின் குழந்தைகளை வகுப்பறையில் அடைத்து வைத்து விட்டதாக அப்பட்டமான புகார்களை அளித்து அதனை விளம்பரமாக்கி தொடர்ந்து என்னிடம் பணம்பறிக்கும் எண்ணத்தில் மிரட்டி வருகின்றார், அப்துல்லா மற்றும் அவருக்கு ஆதரவாக அடியாட்களாக செயல்படும் நபர்கள் மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என துணை ஆட்சியர் அதியமான் கவியரசுவிடம் புகார் மனுவை அளித்தனர்.
இந்த புகார் மனுவை படித்து பார்த்த துணை ஆட்சியர் இது சம்பந்தமாக மாநகர போலீஸ் கமிஷனரிடம் தெரிவித்து விசாரணை செய்து அவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளார்.