திருச்சி கொட்டப்பட்டு பகுதியில் ஆவின் பால் பண்ணை செயல்பட்டு வருகிறது. இந்த பால் பண்ணையில் இருந்து திருச்சி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளுக்கு ஒரு லட்சத்திற்கு அதிகமான லிட்டர் ஆவின் பால் பாக்கெட்டுகள் வாடகை வேன்களில் விநியோகிக்கப்பட்டு வருகிறது. அந்த வேன்களுக்கு கடந்த சில மாதங்களாகவே வாடகை தரவில்லை என குற்றச்சாட்டு எழுந்தது.
இந்நிலையில் திருச்சி ஆவின் பால் பண்ணையிலிருந்து பால் பாக்கெட்டுகளை விநியோகம் செய்யும் 44 வேன்களின் உரிமையாளர்கள் திடீர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். காலை 4 மணியிலிருந்து இந்த வேலை நிறுத்த போராட்டம் நடைபெற்றது.
இதனால் திருச்சி பகுதியில் ஆவின் பால் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டவர்களிடம் ஆவின் பால் பண்ணை நிர்வாகிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். நிலுவைத் தொகையை இன்றே வழங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்படும் என அதிகாரிகள் உறுதியளித்ததைத் தொடர்ந்து, போராட்டமானது கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
இருப்பினும் இன்று காலை விநியோகிக்கப்படும் பால் பாக்கெட்டுகள் சரியாக விநியோகிக்க படாததால் அதிகப்படியான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.