திருச்சியில் சிஎஸ்ஐ குருமார்கள் தேர்வு
மதபோதகருக்கு அனுமதி மறுப்பு :
இருதரப்பினர் வாக்குவாதம் .
திருச்சியில் நடைபெறும் சிஎஸ்ஐ குருமார்கள் தேர்வில் மதபோதகருக்கு அனுமதி மறுத்ததால் இருதரப்பினர் மோதும் சூழல் ஏற்பட்டது. பின்னர் போலீசார் பேச்சு நடத்தி அனுப்பி வைத்தனர்.
திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரியில் சிஎஸ்ஐ திருச்சி – தஞ்சை மறை மாவட்டத்துக்கான 38 ஆவது குருமார்கள் தேர்வு இன்று வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது. இதில் திருச்சி, தஞ்சாவூர் நாகை உள்ளிட்ட 8 வருவாய் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் யூனியன் பிரதேசம் உள்ளிட்டவைகளில் இருந்து சுமார் 300 பேர் பங்கேற்கின்றனர்.
இதில் பெரம்பலூர்- கொள்ளிடம் மறை மாவட்ட கிறிஸ்தவ போதகராக பணியாற்றிய பீட்டர் கிறிஸ்டோபர் என்பவர் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு, பிஷப் (பேராயர்) சந்திரசேகரனால் பணி நீக்கம் செய்யப்பட்டார்.
இந்நிலையில், பீட்டர் கிறிஸ்டோபர், சிஎஸ்ஐ தலைமையக சினாட் நீதிமன்றம் மூலம் மீண்டும் பதவி வழங்க உத்தரவிடப்பட்ட நிலையில், அதற்கான ஆணையுடன் குருமார்கள் தேர்தலில் பங்கேற்க திருச்சி வந்தார். அவர், தேர்தல் நடைபெறும் பிஷப் ஹீபர் கல்லூரி வளாகத்துக்கு நேற்று வியாழக்கிழமை மாலை சென்றார். ஆனால் அவரை தேர்தலில் பங்கேற்க அனுமதிக்க முடியாது எனவும், கல்லூரி வளாகத்தை விட்டு வெளியே செல்லுமாறும் பிஷப் சந்திரசேகரன் மற்றும் சில குருமார்கள் தெரிவித்து, அவரை கல்லூரி வளாகத்திலிருந்து வெளியேற்றும் முயற்ச்சியில் ஈடுபட்டனர்.
ஆனால் கட்டாய வெளியேற்ற நடவடிக்கையை கண்டித்தும், தனக்கான நீதி கிடைக்க வேண்டும் எனவும் பீட்டர் கிறிஸ்டோபர் தெரிவித்து வெளியேற மறுத்து விட்டார். அவருக்கு ஆதரவாக சிஎஸ்ஐ சபையைச் சேர்ந்த மற்றொரு பிரிவினர் அங்கு குவிந்தனர். இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்படும் சூழல் ஏற்பட்டது. இதனையடுத்து தகவலறிந்த போலீசார் நிகழ்விடம் வந்து இருதரப்பினர் மத்தியிலும் பேச்சு வார்த்தை நடத்தி, தேர்தலின்போது வரலாம் எனக்கூறி கிறிஸ்டோபர் தரப்பினரை அங்கிருந்து அனுப்பி வைத்தனர்.