ஆசிய அளவிலான சிலம்பப் போட்டியில் வென்று திருச்சி திரும்பிய வீரர், வீராங்கனைகளுக்கு உற்சாக வரவேற்பு .
ஆசிய அளவிலான சிலம்பம் போட்டி நாகர்கோவில் மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு துறை மைதானத்தில் கடந்த 26 ஆம் தேதி முதல் 29ஆம் தேதி வரை நான்கு நாட்கள் நடைபெற்றது.
இதில் மலேசியா, சிங்கப்பூர், பங்களாதேஷ், இலங்கை, நேபால், இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளை சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட சிலம்ப வீராங்கனைகள் பங்கேற்றனர்.
இந்த ஆசிய அளவிலான சிலம்பம் போட்டியில் திருச்சி மாவட்ட அமைச்சூர் சிலம்பம் அசோசியேசன் சார்பில் 31 சிலம்ப வீரர் வீராங்கனைகள் மாவட்ட செயலாளரும், ஆசிய சிலம்ப நடுவருமான விஜயகுமார் தலைமையில் பங்கேற்றனர்.
10 வீராங்கனைகளும் 21 வீரர்களும் பங்கேற்றனர்.
அதில் மினி சப் ஜூனியர், சப் ஜூனியர், ஜூனியர் மற்றும் சீனியர் ஆகிய நான்கு பிரிவுகளில் வீரர் வீராங்கனைகள் பங்கேற்றனர்.
இதில் ஒற்றை கம்பு வீச்சு, நடு கம்பு வீச்சு, இரட்டைக் கம்பு வீச்சு, ஒற்றை வாள் வீச்சு, இரட்டை வாள் வீச்சு, ஒற்றை சுருள் வீச்சு, இரட்டை சுருள் வீச்சு, குத்துவாரிசை உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் பங்கேற்ற சிலம்ப வீராங்கனைகள் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர். இதில் திருச்சி மாவட்ட அமைச்சூர் சிலம்பம் அசோசியேசன் வீரர் வீராங்கனைகளான மாணவ மாணவிகள் பல்வேறு போட்டிகளில் தங்கம் 15 வீரர்களும், வெள்ளி 12 வீரர்களும் வெண்கலம் 20 வீரர்களும் உ பரிசுகளை தட்டி சென்றனர்.
இதில் ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் இந்திய அணி வீரர்கள் தட்டி சென்றனர். இதனை முன்னிட்டு இன்று திருச்சி ரயில்வே ஜங்ஷன் வந்த சிலம்ப வீராங்கனைகளுக்கு பெற்றோர், பொதுமக்கள் உள்ளிட்ட உற்சாக வரவேற்பு அளித்தனர்.
இதில் தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழகத்தை சேர்ந்த வீரர் கமலேஷ் தங்கமும், அதேபோல் திருச்சி ஹோலி கிராஸ் பெண்கள் கல்லூரியை சேர்ந்த வீராங்கனை யுவஹரிணி தங்கமும் வென்றுள்ளனர்.
மேலும் இந்த ஆசிய அளவிலான சிலம்பப் போட்டியில் வெற்றி பெற்ற வீரர் வீராங்கனைகள் அடுத்த கட்டமாக உலக அளவில் நடைபெற உள்ள சிலம்ப போட்டியில் பங்கேற்பது குறிப்பிடத்தக்கது.