வெளிமாநில பக்தர்களை தாக்கிய ஸ்ரீரங்கம் கோயில் ஊழியர்கள் . இந்து திருக்கோயில் மீட்பு இயக்க நிறுவனர் மகேஸ்வரி வையாபுரி கடும் கண்டனம் .
ஸ்ரீரங்கத்தில் அடிதடி – ரத்த களரியில் துவங்கிய ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோயில் வைகுண்ட ஏகாதேசி துவக்க விழா. இந்து திருக்கோயில் மீட்பு இயக்க நிறுவனர் மகேஸ்வரி வையாபுரி கடும் கண்டனம் . இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :-


திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கத்தில் பூலோக வைகுண்டம் என போற்றப்படும் அரங்கநாதருக்கு வைகுண்ட ஏகாதேசி திருவிழாவானது இன்று திருநெடும் தாண்டகம் என்னும் உற்சவத்தின் மூலம் துவங்க உள்ளது. இந்த துவக்க நாளான இன்று காலையில் அரங்கனை தரிசிக்க வந்த வெளியூர் கர்நாடக மற்றும் ஆந்திர ஐயப்ப பக்தர்களுக்கும் கோவில் நிர்வாகத்தால் நியமிக்கப்பட்ட தற்காலிக ஊழியர்களுக்கும் (இவர்கள் கோயிலில் தற்காலிக காவலர்களாக இருந்து திடிரென கோயில் தற்காலிக ஊழியர்கள் ஆனது தனிக் கதை),ஏற்பட்ட மோதலால் அடிதடி உருவாகி அங்கு கர்நாடக ஐயப்ப பக்தர் சென்னராவ் உட்பட பலர் தாக்கப்பட்டு ரத்த களரி ஏற்பட்டு கலவர சூழ்நிலை உருவாகியது. பக்தர்களை தாக்க யாருக்கும் உரிமை இல்லை . மேலும் கோயில் ஊழியர்கள் மூலஸ்தானத்தில் ஆபாச வார்த்தைகளால் பக்தர்களை திட்டுவது அருவருக்காக வகையில் உள்ளது .


இதனால் தற்போது கோவில் உள்ளே இரத்தம் காணப்படுவதால் .மூலஸ்தானத்தை மூடிவிட்டு பரிகார பூஜை செய்த பின் நடை திறக்கப்படும் எனக் கூறப்படுகிறது.


சென்னா ராவ் தற்போது தங்களை தாக்கிய தற்காலிக பணியாளர்களான செல்வம், விக்னேஷ்,பரத் குழுவினர் தங்களை தாக்கியதாக போலிஸில் புகார் மனு அளித்துள்ளனர். அடிபட்ட ஐயப்ப பக்தர்கள் ஸ்ரீரங்கம் அரசு மருத்துவ மனைக்கு சிகிச்சை பெற சென்றுள்ளதாக தெரிகிறது. இங்கு கோவிலில் உள்ள காவல் துறையினர் அடிபட்ட ஐயப்ப பக்தர்களை காப்பாற்றமல் – தாக்குதல் நடத்திய கோவில் ஊழியர்களுக்கு துணைபுரிந்து தாக்குதலுக்கு உள்ளாகி காயம் பட்டவர்களை கோயிலுக்கு வெளியே தள்ளிகொண்டு வந்து இதனை மறைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வந்துள்ளனர். ஐயப்ப பக்தர்கள் கார்த்திகை கோபுரம் கொடிமரம் போன்ற இடங்களில் தொடர்ந்து 100க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வந்தது காவல்துறையின் மூலம்தடுக்கப்பட்டதாக தெரிகிறது. மேலும் அடிபட்ட பக்தர்கள் தங்களை தாக்கிய தற்காலிக பணியாளர்களான மூவர் மீதும் கோயில் நிர்வாகத்தின் மீதும் புகார் கொடுத்தும்-
காவல் துறையினர் அவர்களின் புகாரை வாங்காமல்- அவர்களை விரட்டி விடும் முயற்சியில் ஈடுபட்டனர். இங்கு பக்தர்களுக்கு பாதுகாப்பு தருகிறோம் என்று உள்ளே உள்ள காவல் துறை பக்தர்களை பாதுகாக்காமல் கோயில் உள்ள இது போன்று அராஜகம்- ரவுடியிசம் செய்பவர்களுக்கு துணை போகும் அவலம். இது போன்று இங்கு நடைபெறும் இந்த அடாவடி அலட்சிய – ரவுடியிச போக்கால் வைகுண்ட ஏகாதேசி திருவிழா போகப்போக எப்படி நடைபெறப் போகிறதோ? என்ற அச்சம் பக்தர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

பல்லாயிரக்கணக்கான மக்கள் வந்து செல்லும் இந்த ஸ்ரீரங்கம் கோவிலுக்கு அரங்கனை மூலஸ்தானத்தில் தரிசிக்கும் ஏற்பாட்டில் உள்ள குளறுபடிகளை உடனடியாக நிவர்த்தி செய்து அங்கு அரங்கனை மனம் குளிர்ந்து தரிசித்து செல்லும்படி இந்த கோயில் நிர்வாகம் ஏற்பாடுகளை செய்ய வேண்டும் எனவும் இதற்கு இந்து அறநிலையத்துறை தரமான ஆட்களை கனிவான அங்கு பணிபுரியும் ஆட்களை பணியில் அமர்த்த ஆவணம் செய்ய வேண்டும் என இந்து திருக்கோயில் மீட்பு இயக்கத்தின் சார்பாக கேட்டுக்கொள்கிறோம்.



மேலும் இந்த வைகுண்ட ஏகாதேசி திருவிழாவில் எம்.என்.ஆர். என்ற பெயரிலும் தற்காலிக ஊழியர்கள் என்ற பெயரிலும் கோயில் ஆன் -டூட்டி என்ற பெயரிலும் ஐடி கார்டை போட்டுக்கொண்டு உள்ளூர் -ரவுடிகளையும் கோவிலுக்கு சம்பந்தமில்லாத நபர்களையும் அங்கே உள்ளே வேலைக்கு வைத்துள்ளதாலும் – இவர்களுக்கு பக்தர்களை எப்படி கையாள வேண்டும் என்ற நெறிமுறை தெரியாததாலும் – வருமானம் ஒன்றையே குறிக்கோளாக கொண்டு இவர்கள் இங்கு வருகின்ற பக்தர்களை மிகவும் மட்ட ரகமான பேச்சுக்களால் பேசியும் – ஒரு சகிப்பு தன்மை இல்லாமல் பக்தர்களை கும்பலாக சேர்ந்து அடிக்கும் நிகழ்ச்சியும் தினந்தோறும் நடப்பது வாடிக்கையாக உள்ளது. இங்கு கோயிலில் மூலஸ்தானத்தில் வேலை பார்க்கும் இது போன்ற ஊழியர்களை யாராவது தட்டிக் கேட்டால் – நீ யாரிடம் வேண்டுமானாலும் சென்று புகார் கொடு- எங்களை எதுவும் செய்ய முடியாது – உள்ளூர் மந்திரி முதல் HR – CE மந்திரி வரை நாங்கள் பணம் (மாமூல்) கொடுத்து வருகிறோம் என அனைவரையும் மிரட்டி வருகின்றனர். இது போன்ற ஊழியர்களை ஸ்ரீரங்கம் கோவில் நிர்வாகம் நீக்கிவிட்டு சமூகப் பணியாற்றி இறைபணியில் நம்பிக்கை உள்ள தன்னார்வ தொண்டர்களையும் – கல்லூரி என்.சி.சி. மாணவர்களையும் – ஒய்வு பெற்று இறை பணி செய்ய ஆர்வம் உள்ள ஆண்- பெண் – தன்னார்வ ஊழியர்களையும் நியமிக்க வேண்டுமென இதன் மூலம் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்.
வெளியூர் பக்தர்களை தாக்கிய நபர்கள் மீது தாசில்தார் தலைமையில் குற்றவியல் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் . இது குறித்து நீதி விசாரணை நடத்த வேண்டும் .
வெளிமாநில பக்தர்கள் தாக்கப்பட்டு இருப்பதால் இந்து சமய அறநிலை துறை ஆணையர் இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் சேகர்பாபு ஆகியோர் நேரடியாக விசாரணை நடத்தி உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்
என இந்து திருக்கோயில் மீட்பு இயக்க நிறுவன தலைவர் மகேஸ்வரி வையாபுரி தனது கண்டன அறிக்கையில் கூறியுள்ளார்.

