பூலோகநாதர் கோயில் குடமுழுக்கு திருப்பணிகளை விரைந்து முடிக்க இந்து திருக்கோயில் மீட்பு இயக்க நிறுவனர் மகேஸ்வரி வையாபுரி வலியுறுத்தல் .
திருச்சி இ.பி. ரோடு பூலோகநாதா் கோயிலில் திருப்பணிகளை விரைந்து முடிக்க கோரி இந்து திருக்கோயில் மீட்பு இயக்கத்தின் நிறுவனத் தலைவர் மகேஸ்வரி வையாபுரி வலியுறுத்தியுள்ளர் இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் :-
திருச்சி இ.பி.ரோடு பகுதியில் உள்ளது ஜெகதாம்பிகை சமேத பூலோகநாதா் திருக்கோயில்.
திருச்சியில் உள்ள 5 நாதா் கோயில்களில் ஒன்றாகவும், வாஸ்து கோயிலாகவும் அறியப்படும் இக்கோயிலில் ஆண்டுக்கு 8 முறை நடைபெறும் வாஸ்து பூஜை, யாகத்தில் பங்கேற்போருக்கு வீட்டுமனை பிரச்னைகள், இடத்தகராறு, வாஸ்து குறைகள், வீடு மற்றும் மனை வாங்கும் யோகம் கிடைக்கும் என்பது ஐதீகம்.
இந்து சமய அறநிலையத் துறையின் கீழுள்ள இக்கோயிலின் திருப்பணிக்கு ஒப்புதல் அளிக்கப்பட்ட நிலையில், கடந்த 6 மாதங்களுக்கு முன் பாலாலயம் செய்யப்பட்டது.
இதையடுத்து உபயதாரா்கள் மூலம் ரூ. 40 லட்சத்தில் கோயில் கோபுரக் கற்றளிகள் தூய்மைப்படுத்தப்பட்டு, பிளவுள்ள இடங்களில் கலவை வைத்து மூடப்பட்டு, வண்ணம் பூசும் பணி, தேக்கு மரத்தில் செப்புத் தகடுகள் வேய்ந்த கொடிமர பிரதிஷ்டை பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
இப்பணிகள் மிகவும் மெதுவாக நடைபெற்று வருகிறது.
எனவே அனைத்துப் பணிகளையும் விரைந்து முடித்து கோயில் குடமுழுக்கை உடனடியாக நடத்த வேண்டும் என இந்து திருக்கோயில் மீட்பு இயக்கத்தின் நிறுவன தலைவர் மகேஸ்வரி வையாபுரி தனது அறிக்கையில் வலியுறுத்தி உள்ளார்.