சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகை முன்பு இன்று பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. இதுதொடர்பாக பிரபல ரவுடியான கருக்கா வினோத்தை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.
இந்நிலையில் தான் அவர் எதற்காக ஆளுநர் மாளிகையை குறிவைத்து பெட்ரோல் குண்டு வீசினார் என்பதன் பின்னணி குறித்த திடுக்கிட வைக்கும் தகவல் வெளியாகி உள்ளது.
சென்னை கிண்டியில் தமிழக ஆளுநர் மாளிகை (ராஜ்பவன்) அமைந்துள்ளது. நாளை ஆளுநர் மாளிகைக்கு ஜனாதிபதி திரெளபதி முர்மு வருகை தர உள்ளார். இந்நிலையில் தான் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரமாக செய்யப்பட்டு வருகின்றன.
அதோடு ஆளுநர் மாளிகை பகுதியில் பாதுகாப்பு ஒத்திகை பணிகளுக்கும் சென்னை போலீசார் திட்டமிட்டு இருந்தனர்.
இந்நிலையில் தான் இன்று மாலையில் திடீரென்று ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வெடித்து சிதறியது.
மர்மநபர் ஒருவர் ஆளுநர் மாளிகை அருகே பெட்ரோல் குண்டு வீசிவிட்டு சென்றார். இதையடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த போலீசார் விரட்டி சென்று அந்த நபரை மடக்கி பிடித்து கைது செய்தனர். அப்போது அவரிடம் 3 பெட்ரோல் குண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது.
அதோடு அந்த நபர் தேனாம்பேட்டையை சேர்ந்த ரவுடி கருக்கா வினோத் என்பது தெரியவந்தது. இதையடுத்து கருக்கா வினோத்தை கைது செய்த கிண்டி போலீசார் அவரிடம் தீவிர விசாரணையை தொடங்கினர். இந்த வேளையில் சிறையில் இருந்த கருக்கா வினோத்தை விடுதலை செய்ய ஆளுநர் ஆர்.என். ரவி அனுமதி வழங்காமல் இருந்ததாகவும், நீட் தேர்வு வேண்டாம் என்றும் பெட்ரோல் குண்டு வீசியதாகவும் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
முன்னதாக இவர் கடந்த 2022ல் சென்னையில் உள்ள பாஜக அலுவலகத்தின் மீது பெட்ரோல் குண்டு வீசி கைது செய்யப்பட்டார். அப்போது நீட் தேர்வை பாஜக ரத்து செய்ய மறுப்பதால் பெட்ரோல் குண்டு வீசியதாக தெரிவித்து பரபரப்பை கிளப்பினார். இந்த நிலையில் தான் தற்போது ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீசியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் பாஜக அலுவலகம் மீது பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் கடந்த ஓராண்டுகளாக அவர் சிறையிலேயே இருந்தார். 2 நாட்களுக்கு முன்பாக சிறையில் இருந்து வெளியே வந்த நிலையில் அவர் ஆளுநர் மாளிகையை குறிவைத்துள்ளார். இதுதவிர கருக்கா நாகராஜ் தொடர்ந்து பெட்ரோல் குண்டு வீச்சில் ஈடுபட்டு வருகிறார்.
கடந்த 2015ல் தன்னை அனைவரும் கவனிக்க வேண்டும் என டாஸ்மாக் கடை மீது அவர் பெட்ரோல் குண்டு வீசினார். அதன்பிறகு தேனாம்பேட்டை போலீஸ் நிலையம் முன்பு அவர் பெட்ரோல் குண்டு வீசினார். இவர் மீது ஏற்கனவே 9 வழக்குகள் நிவையில் உள்ள நிலையில் ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீசி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.