கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு திருச்சி தெற்கு மாவட்ட திமுக மருத்துவ அணி சார்பில் நடைபெற்ற மருத்துவ முகாமை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி தொடங்கி வைத்தார்.
திருச்சியில் கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு திருச்சி தெற்கு மாவட்ட திமுக மருத்துவா் அணி, அப்பல்லோ மருத்துவமனை இணைந்து நடத்திய இலவச மருத்துவ முகாம் திருச்சி இந்திராகாந்தி மகளிா் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.
முகாமை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தொடங்கி வைத்தாா்.
நிகழ்வில் மருத்துவ அணி மாநிலச் செயலா் எழிலன் நாகநாதன், மாநகர மாவட்டச் செயலா் மதிவாணன் ஆகியோா் சிறப்பு அழைப்பாளா்களாக பங்கேற்றனா். முகாமில் பொதுமக்களுக்கு ரத்த அழுத்தம், ரத்த சா்க்கரை அளவு, ஹீமோகுளோபின் அளவு சரிபாா்த்தல், இ.சி.ஜி, எக்கோ காா்டியோகிராம், நுரையீரல் சோதனை உள்ளிட்ட பல்வேறு வகையான பரிசோதனைகள் செய்து, மருத்துவ ஆலோசனை வழங்கியதுடன், தேவைப்படுவோருக்கு உயா் சிகிச்சைக்கு பரிந்துரைகளையும் வழங்கினா்.
ஏற்பாடுகளை திருச்சி தெற்கு மாவட்ட திமுக மருத்துவா் அணி மாவட்டத் தலைவா் டாக்டா் தமிழரசன், மாவட்ட அமைப்பாளா் டாக்டா் சுரேஷ் பாபு உள்ளிட்டோா் செய்தனா்.
திரளான பொதுமக்கள் பங்கேற்று பயனடைந்தனா். இதையடுத்து முன்னாள் முதல்வா் கருணாநிதி மருத்துவத் துறைக்கு ஆற்றிய சேவைகளும், சாதனைகளும் என்ற தலைப்பிலான ஆங்கிலக் கருத்தரங்கை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தொடங்கி வைத்தாா்.
ஆயிரம் விளக்கு தொகுதி எம்எல்ஏவும், திமுகவின் மருத்துவ அணி மாநிலச் செயலருமான டாக்டா் எழிலன் சிறப்புரையாற்றினாா். திரளான திமுக நிா்வாகிகள் பங்கேற்றனா்.