துவாக்குடி அருகே
குவாரி பள்ளத்தில் ஆண் பிணம்.
திருச்சி,துவாக்குடி அருகே உள்ள வாழவந்தான் கோட்டை ஐயம்பட்டி சாலை பகுதியில் உள்ள சுமார் 300 அடி ஆழமுள்ள கல்குவாரி பள்ளத்தில் நேற்று சடலம் ஒன்று மிதப்பதாக துவாக்குடி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு, தீயணைப்புத்துறையினர் உதவியுடன் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
கிராம நிர்வாக அலுவலர் ஜெயலட்சுமி அளித்த புகாரின் பேரில், இறந்து கிடந்தவர் யார் ? அவர் தவறி விழுந்து இறந்தாரா? தற்கொலை செய்துகொண்டாரா ? அல்லது கொலை செய்யப்பட்டாரா என்ற கோணத்தில் துவாக்குடி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். தடயவியல் நிபுணர்களும் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
இதற்கிடையே துவாக்குடி, பெல், திருவெறும்பூர் பகுதிகளில் யாரேனும் காணாமல் போயுள்ளனரா ? என குறிப்பிட்ட காவல் நிலையங்களில் பதிவான புகார்களின் அடிப்படையில் போலீஸார் விசாரணை மேற்கொண்டதில், ஒருவர் காணாமல் போனதாக, திருவெறும்பூர் காவல் நிலையத்தில் புகார் மனு பதிவு செய்யப்பட்டிருந்தது தெரியவந்தது.
திருவெறும்பூர் வ உ சி நகரை சேர்ந்த ம. சுரேஷ் (38)என்பவர் கடந்த இரு தினங்களுக்கு முன்பு காணாமல் போனதாக அவரது மனைவி உமாதேவி அளித்த புகாரின்பேரில் போலீஸார் வழக்கு பதிவு செய்திருந்தனர்.
அதன் அடிப்படையில் சுரேஷ் குடும்பத்தினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த உமாதேவி மற்றும் குடும்பத்தினர் இறந்து கிடந்தது சுரேஷ் இல்லை என தெரிவித்துள்ளனர். எனவே, கல் குவாரி பள்ளத்தில் இறந்து கிடந்தவர் குறித்த விவரம் தெரியவில்லை.
இந்த இரு புகார்கள் தொடர்பாக துவாக்குடி மற்றும் திருவெறும்பூர் போலீஸார் தனித்தனியாக விசாரணை மேற்கொண்டுள்ளனர்.