
திருச்சியில் இன்று தனியார் பஸ் மோதி புது மாப்பிள்ளை (ரயில்வே ஊழியர்) பலி.
இன்று காலை நடந்த இந்த விபத்து பற்றிய விவரம் வருமாறு:-
திருச்சி ஜங்ஷன் ரயில்வே காலனி பகுதியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மகன் மோகன் (வயது 35). இவருக்கு திருமணம் ஆகி 10 மாதங்கள் ஆகிறது. ரயில்வே ஊழியரான இவருக்கு பிரியா (வயது 27 )என்ற மனைவி உள்ளார். இன்று காலையில் திருச்சி ஜங்ஷன் அருகேயுள்ள ரயில்வே குடியிருப்பில் இருந்து அருகில் உள்ள முனீஸ்வரன் கோவில் பகுதியில் குடிநீர் எடுப்பதற்காக சென்றார். குடிநீர் எடுத்து விட்டு வீட்டுக்கு திரும்பினார். நடந்து ரோட்டை கிராஸ் பண்ணும் போது திருச்சி தலைமை தபால் நிலையத்திலிருந்து ஜங்ஷன் நோக்கி அதி வேகமாக போட்டி போட்டு வந்த தனியார் பஸ்களில் ஒன்று இவர் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட ரயில்வே ஊழியர் மோகன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இது குறித்து தெற்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

