திருச்சி மத்திய சிறை வளாகத்தில் கைதிகள் விளைவித்த
கரும்புகள் விற்பனைக்கு.
திருச்சி மத்திய சிறை வளாக தோட்டத்தில் பயிரிடப்பட்ட கரும்புகள், பொங்கலை முன்னிட்டு அறுவடை செய்து விற்பனை தொடங்கியுள்ளன. சிறை அங்காடியில் அவற்றை பெற்றுக்கொள்ளலாம்.
திருச்சி மத்திய சிறை வளாகத்தில் சுமார் 24 ஏக்கர் பரப்பளவில் விவசாய நிலம் உள்ளது. இதில் நெல், மற்றும் வாழை, கரும்பு, பப்பாளி, காய்கறிகள், கனிவகைகள், வெங்காயம் உள்ளிட்ட தோட்டப்பயிர்கள் தென்னை, கொய்யா உள்ளிட்ட மரப்பயிர்கள் பயிரிடப்பட்டு அவற்றின் மூலம் ஏராளமான வேளாண் பொருட்கள் உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றன.
தண்டனைக் கைதிகளைக் கொண்டு இவற்றுக்கான வேளாண் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதில் முக்கியமாக ஆண்டுதோறும், பொங்கல் பண்டிகைக்கு பயன்படும் செங்கரும்பு அதிகளவில் சிறை வளாகத்தில் பயிரிடப்பட்டு பொங்கல் பண்டிகையின் போது விற்பனை செய்யப்படுகின்றன. அந்த வகையில் நிகழாண்டு தேவைக்கான கரும்பு விவசாயப் பணிகள், திருச்சி மத்திய சிறை துணைத் தலைவர் ஜெயபாரதி முன்னிலையில் மேற்கொள்ளப்பட்டு முறையாக பராமரிக்கப்பட்டு வந்தது. சுமார் 2 ஏக்கர் பரப்பளவில் பயிரிட்ட கரும்புகளை அறுவடை செய்து, விற்பனை செய்யும் பணிகள் நேற்று முதல் சிறைவாசிகள் தொடங்கியுள்ளனர்.
இது குறித்து சிறைத்துறை துணைத்தலைவர் ஜெயபாரதி கூறுகையில்,
மத்திய சிறை வளாகத்தில் பயிரிடப்படும் கரும்பு அறுவடை செய்யப்பட்டு, சிறை அங்காடி மூலமாக பொதுமக்களுக்கு விற்பனை செய்யப்படுகிறது. வெளிச்சந்தையில் விற்பனையாகும் கரும்புகளைவிட தரமாகவும், விலையும் குறைவாக இருப்பதால் எப்போதுமே சிறைவளாகத்தில் பயிரிடப்படும் கருப்புகளுக்கு பொதுமக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. கரும்பு விற்பனையானது அரசுக்கு லாபம் ஈட்டும் வகையிலும் மற்றும் பொதுமக்களுக்கு குறைந்த விலையிலும் கரும்பு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கரும்பு விற்பனையில் வரும் ஒரு பகுதியை சிறைவாசிகளுக்கு ஊதியமாகவும் வழங்கி வருகிறோம் என்றார்.
தண்டனை பெற்றுள்ள சிறைவாசிகளுக்கு மன அழுத்தத்திலிருந்து விடுதலை பெறவும், சிறையிலிருந்து விடுதலை பெற்று வெளியே சென்றபின்னர் அவர்களது வாழ்வாதரத்தை மேம்படுத்தவும், சிறையில் சுய தொழில்கள், வேளாண் தொழில்கள் உள்ளிட்ட அனைத்து பயிற்சிகளும் அவரவர் விருப்பத்திற்கேற்ப வழங்கப்படுதிறது.
இது பிற்காலங்களில் அவர்களுடைய வாழ்க்கை முறையை மாற்றிக்கொள்ளவும், வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும் உறுதுணையாக இருக்கும் என்றார்.