தமிழக முதல்வர் திருச்சி வருகையையொட்டி
அண்ணா விளையாட்டு அரங்கில் அரசு விழா ஏற்பாடு தீவிரம்.மணப்பாறை மொண்டிப்பட்டியில் காகித கூழ் தயாரிக்கும் தொழிற்சாலையை தொடங்கி வைக்கிறார்.
தமிழக முதலமைச்சர் முக. ஸ்டாலின் தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளையும், புதிய திட்டங்களுக்கு அடிக்களும் நாட்டி வருகிறார்.அந்த வகையில் திருச்சிக்கு வருகிற 29ந் தேதி (வியாழக்கிழமை) தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வருகை தர உள்ளார்.
திருச்சிஅண்ணா விளையாட்டு அரங்கில் நடைபெறும் அரசு விழாவில் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கல், மாவட்டத்தில் நிறைவடைந்த பணிகளை தொடங்கி வைத்தல், புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழா, அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் கலந்துகொண்டு பணிகளை தொடங்கி வைக்கிறார்.
மேலும் இந்த நிகழ்ச்சியில் இளைஞர் மற்றும் விளையாட்டு துறை அமைச்சராக பொறுப்பேற்றுள்ள உதயநிதியும் கலந்து கொள்கிறார்.
இதற்காக அண்ணா விளையாட்டு அரங்கில் பிரம்மாண்டமான பந்தல் அமைக்கும் பணி வேகமாக நடைபெற்று வருகிறது.
திருச்சி விழாவில் பங்கேற்பதற்காக தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் வருகிற 29ந்தேதி (வியாழக்கிழமை)காலை 8:30 மணிக்கு சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் திருச்சி வந்தடைகிறார். விமான நிலையத்தில் அவருக்கு அமைச்சர்கள், கலெக்டர், மேயர், போலீஸ் அதிகாரிகள் மற்றும் அரசு அதிகாரிகள் வரவேற்பு அளிக்கின்றனர். பிறகு அங்கிருந்து கார் மூலம் புறப்பட்டு அண்ணா விளையாட்டரங்கம் வந்தடைகிறார். பிறகு அங்கு நடக்கும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் கலந்து கொண்டு முதலமைச்சர். மு க ஸ்டாலின் பேசுகிறார். பிறகு அண்ணா விளையாட்டு அரங்கில் இருந்து கார் மூலம் புறப்பட்டு திருச்சி மாவட்டம் மணப்பாறை மொண்டிபட்டியில் டிஎன்பிஎஸ் சார்பில் அமைக்கப்பட்டுள்ள காகித கூழ் தயாரிக்கும் பிளாண்ட்டை தொடங்கி வைக்கிறார். பிறகு காகித ஆலை வளாகத்தில் உள்ள ஓய்வு மாளிகையில் மதியம் சிறிது நேரம் ஓய்வு எடுக்கிறார்.
பின்னர் மதியம் 1 மணிக்கு அங்கிருந்து திருச்சி நோக்கி புறப்பட்டு தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் வரும் வழியில் சன்னியாசிப்பட்டியில் மதியம் 2 மணி அளவில் மக்களை தேடி மருத்துவம் திட்டத்தை ஆய்வு செய்கிறார். அப்போது இந்த மருத்துவத்தில் பயனடைந்த ஒரு கோடியாவது நபருக்கு மருத்துவ உபகரணங்களை வழங்குகிறார்.
பின்னர் அங்கிருந்து புறப்பட்டு திருச்சி விமான நிலையம் வரும் முதலமைச்சர் மு க ஸ்டாலின் 2 மணி அளவில் விமானம் மூலம் சென்னை செல்கிறார்.
அரசு விழா நடைபெறும் அண்ணா விளையாட்டு அரங்கத்தில் பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்ட வருகிறது. பிரம்மாண்டமான மேடை அமைக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதற்காக இப்பகுதியிலும்,சுற்றி உள்ள இடங்களிலும் விளையாட்டரங்கத்தின் நுழைவாயில் உள்ளிட்ட முக்கிய இடங்களில் உள்ள செடி கொடிகள் புதர்கள் அகற்றப்பட்டு மண் அடித்து சமன் செய்யப்பட்டு உள்ளது. மைதானத்தின் உள்ளே இருந்த மரங்களும் வெட்டப்பட்டு அதற்கு பதிலாக வேறு இடங்களில் மரங்கள் நடப்பட்டுள்ளது. இதனால் திருச்சி அண்ணா விளையாட்டு அரங்கம் புது பொலிவுடன் அழகாக காட்சியளிக்கிறது.