வைகை- குண்டாறு இணைப்பு திட்டத்திற்கு
கையகப்படுத்தப்பட்ட நிலத்தை காண்பித்து அரசு டாக்டரிடம் ரூ. 52 லட்சம் மோசடி.
திருச்சி கூத்தூர் ஹை வே சிட்டி அம்மையப்பா நகர் பகுதியை சேர்ந்தவர் சாந்தி. இவர் திருச்சி ஆயுதப்படை போலீஸ் மருத்துவமனையில் டாக்டராக பணியாற்றி வருகிறார்.
இந்த நிலையில் திருச்சி மணிகண்டம் கொங்கு நகர் பகுதியை சேர்ந்த மூர்த்தி என்பவர் விராலிமலை பகுதியில் உள்ள தமக்கு சொந்தமான நிலத்தை விற்பதாக சாந்தியிடம் தெரிவித்துள்ளார். பின்னர் இது தொடர்பான பேச்சு வார்த்தை நடந்து வந்த நிலையில் மூர்த்தி திடீரென இறந்து விட்டதாக கூறப்படுகிறது. அதன் பின்னர் அவரது மகள் கார்த்திகா, மகன் கார்த்திக், மூர்த்தியின் மனைவி கோகிலா, சோமரசம்பேட்டை பகுதியைச் சேர்ந்த சுரேஷ், திருச்சி மகாலட்சுமி நகர் முபாரக் அலி ஆகியோர் சேர்ந்து அந்த நிலத்தை விற்பதாக கூறி ரூ.
52 லட்சம் டாக்டரிடம் பெற்றதாக கூறப்படுகிறது.
பின்னர் வில்லங்கச் சான்று எடுத்து பார்த்தபோது அந்த நிலம் காவேரி வைகை குண்டாறு இணைப்பு திட்டத்திற்கு தமிழக அரசின் மூலம் கையகப்படுத்தப்பட்ட நிலம் என்பது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த சாந்தி பணத்தை மோசடி செய்த கார்த்திகா உள்ளிட்ட 5 பேரிடமும் பணத்தை திரும்ப கேட்டார். ஆனால் அவர்கள் கொடுக்கவில்லை.
இதனால் பாதிக்கப்பட்ட சாந்தி மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அரசின் திட்டத்துக்கு கையகப்படுத்தப்பட்ட நிலத்தை காண்பித்து அரசு டாக்டரிடம் ரூ 52 லட்சம் மோசடி செய்த சம்பவம் பெரும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.