கட்டிடம் கட்டித் தருவதாக ரூ. 23 லட்சம் மோசடி செய்த சிவில் இன்ஜினியர் மீது வழக்கு.
திருச்சியில் கட்டடம் கட்டுவதில் ரூ.23 லட்சம் மோசடி செய்ததாக பொறியாளர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
திருச்சி, எடமலைப்பட்டி புதூர் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பைச் சேர்ந்தவர் குமார் என்பவரின் மனைவி ஆனந்தலட்சுமி.
குமார் வெளிநாட்டில் பணியாற்றி வருகிறார். இவர்கள் கே கே நகர் பகுதியில் இடம் வாங்கி அதில் வீடுகட்டும் பணிகளை மேற்கொண்டுள்ளனர். ஓலையூர், செட்டிநாடு கார்டன் பகுதியைச் சேர்ந்த பாரதிராஜா (வயது 42) என்பவர் (டிவிஎஸ் டோல்கேட் பகுதியில் அலுவலகம் நடத்தி வருவதுடன்) அந்த வீட்டு கட்டுமானப் பணிகளை ஏற்று நடத்தி வந்துள்ளார்.
வீடு கட்டும் பணிகளுக்கென ரூ. 46 லட்சம் கொடுத்துள்ளதாகவும், ஆனால் ரூ. 23 லட்சம் பெறுமானமுள்ள பணிகள் மட்டுமே மேற்கொண்டுள்ளதாகவும், மீதி பணிகளை காலம் தாழ்த்தி வந்ததாகவும் கூறப்படுகிறது.
இது தொடர்பாக பொறியாளர் பாரதிராஜாவிடம் கேட்டபோது, அவர் முறையாக பதில் அளிக்கவில்லையாம். எனவே, மீதி ரூ. 23 லட்சத்தை கொடுத்துவிடுமாறு கேட்டபோது, அவர் பணம் தர மறுத்ததுடன், மிரட்டல் விடுத்து பேசியதாகவும் கூறப்படுகிறது.
இதனையடுத்து ஆனந்தலட்சுமி
கே கே நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.