திருச்சியில் திருமணம் ஆகாமல் குழந்தை பெற்ற கல்லூரி மாணவிக்கு விஷம் கொடுத்து கொன்ற தந்தை. அத்தை கைது.
திருமணம் ஆகாமல் குழந்தை பெற்ற கல்லூரி மாணவியை விஷம் கொடுத்து கொலை செய்ததாக தந்தை, அத்தை கைது
திருச்சி அருகே உள்ள ஜீயபுரம் எலமனூர் தபோவனம் பகுதியில் உள்ள ஒரு புதரில் கடந்த 5-ந் தேதி பிறந்து சில மணி நேரங்களான ஒரு அழகான ஆண் சிசு வீசப்பட்டு அழுது கொண்டிருந்தது. இது பற்றி அப்பகுதி மக்கள் கொடுத்த தகவலின் பேரில் ஜீயபுரம் போலீசார் அந்த குழந்தையை மீட்டு திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அந்த குழந்தை பராமரிக்கப்பட்டு வருகிறது.
பின்னர் நடத்தப்பட்ட விசாரணையில்
குழந்தையை பெற்றெடுத்தவர் ஜீயபுரம் எலமனூர் பகுதியைச் சேர்ந்த செல்வமணி மகள் கலைவாணி (வயது 19) என்பது தெரியவந்தது.
கல்லூரி மாணவியான அவர்
திருமணம் ஆகாத நிலையில் காதலன் மூலமாக கர்ப்பம் தரித்து குழந்தை பெற்றுள்ளார்.
இது வெளியில் தெரிந்தால் சமூகத்தில் அசிங்கமாக விடும் என நினைத்து மனதை கல்லாக்கி கொண்டு குழந்தையை அவர் முதலில் வீசியது தெரிய வந்தது.
பின்னர் குழந்தை பெற்ற அந்த மாணவி விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்று திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டதாக தகவல் வெளியானது.
இந்த நிலையில் சிகிச்சை பலன் அளிக்காமல் கலைவாணி நேற்று அதிகாலை 3:30 மணியளவில் சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக இறந்தார்.
இதற்கிடையே சிகிச்சையில் இருக்கும் போது கலைவாணி திருச்சி மூன்றாவது மாஜிஸ்திரேட்டிடம் மரண வாக்கு மூலம் அளித்துள்ளார். அதில் தனது வாயில் விஷம் ஊற்றியதாக கூறியுள்ளதாக பரபரப்பு தகவல் வெளியானது.
அதைத் தொடர்ந்து போலீசார் திருப்பராய்த்துறை கிராம நிர்வாக அலுவலர் சுரேஷ் பாபு அளித்த புகாரின் பேரில் மாஜிஸ்ட்ரேட்டுவிடம் மாணவி அளித்த வாக்குமூலத்தை பெற்று விசாரணை நடத்தினர். இதில் பல திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தன.
கலைவாணியின் தாயார் தோட்டத்துக்கு சென்ற நிலையில் மாணவியின் தந்தை செல்வமணி, அவரது சகோதரி மல்லிகா (கலைவாணியின் அத்தை) ஆகியோர் பூச்சிக்கொல்லி மருந்தை கலைவாணியிடம் கொடுத்து குடிக்க வலியுறுத்தியதாக எழுத்து மூலமாக மாஜிஸ்திரேட்டிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.
அதன் அடிப்படையில் தற்கொலை வழக்கு கொலை வழக்காக மாற்றப்பட்டது. மேற்கண்ட 2 பேர் மீதும் கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டது. ஏற்கனவே போலீசாரின் கஸ்டடியில் இருக்கும் செல்வமணி மற்றும் மல்லிகா ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்களிடம் துருவி துருவி விசாரணை நடத்தினர். விசாரணையில் திருமணமாகாமல் குழந்தை பெற்றதற்காக கல்லூரி மாணவி கலைவாணியை விஷம் கொடுத்து கொன்றதை ஒப்புக்கொண்டனர்.இதில் கலைவாணியின் தந்தைக்கு அவரது அத்தை உடந்தையாக இருந்துள்ளார். இதைத் தொடர்ந்து அவர்கள் இருவரும் இன்று மாலைக்குள் கோர்ட்டில் ஆஜர் படுத்த போலீசார் முடிவு செய்துள்ளனர்.
மாணவி சாவில் திடீர் திருப்பமாக தந்தை மற்றும் அவரது அத்தை ஆகியோர் மீது கொலை வழக்கு பதிவு செய்து, கைது செய்யப்பட்டுள்ளது அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.