கேகே நகர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்கு சிறந்த பள்ளிக்கான விருது. அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி வழங்கினார்.
சிறந்த பள்ளிக்கான விருதை கே.கே.நகர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்கு அமைச்சர் அன்பில் மகேஷ்பொய்யாமொழி வழங்கினார்.
சிறந்த பள்ளிக்கான தேர்வு
தமிழகம் முழுவதும் பள்ளி கல்வி குழு உறுப்பினர்கள் தொடக்கப்பள்ளிகளின் செயல்பாடு, கற்றல் உள்ளிட்டவை குறித்து மாநிலத்தில் உள்ள தொடக்கப்பள்ளிகளில் ஆய்வு மேற்கொண்டனர்.
அதன்படி திருச்சி மாவட்டத்திலும் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது. திருச்சி கே.கே.நகரில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியிலும் கல்வி குழு உறுப்பினர்கள் ஆய்வு மேற்கொண்டனர். கற்பித்தல் செயல்பாடு, மாணவர்களின் அடைவுத்திறன், மாணவர் சேர்க்கை உள்ளடங்கிய கல்வி இவற்றை பற்றி ஆய்வு செய்தனர்.
இந்த நிலையில் திருச்சி மாவட்டத்தில் கே.கே.நகர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்பட 3 பள்ளிகள் சிறந்த பள்ளியாக தேர்வு செய்யப்பட்டன. இதற்கான விருது வழங்கும் விழா சென்னையில் அண்ணா நூற்றாண்டு வளாகத்தில் நடந்தது. இதில் மாநிலம் முழுவதும் தேர்ந்தெடுக்கப்பட்ட பள்ளிகளுக்கு சிறந்த பள்ளிக்கான விருது வழங்கப்பட்டது.
இதில் தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ்பொய்யாமொழி கலந்து கொண்டு தேர்வான பள்ளிகளுக்கு விருதினை வழங்கினார்.
கே.கே.நகர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்கான விருதை மணிகண்டம் வட்டார கல்வி அலுவலர் இரா.தமிழ்ச்செல்வன், பள்ளி தலைமை ஆசிரியை வனஜா, உதவி ஆசிரியை சுமதி ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் தொடக்க கல்வி இயக்குனர் அறிவொளி, இல்லம் தேடி கல்வி இயக்குனர் இளம் பகவத்சிங் மற்றும் கல்வித்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
விருது பெற்றதையடுத்து பள்ளி தலைமை ஆசிரியை மற்றும் ஆசிரியைகளுக்கு பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள், பெற்றோர் ஆசிரியர் குழு உறுப்பினர்கள், மாணவர்களின் பெற்றோர், முன்னாள் மாணவர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.