திருச்சியில் மூதாட்டி,வாலிபரிடம் நகை பணம் பறிப்பு
2சிறுவர்கள் உட்பட 3 பேர் கைது.
திருச்சி கருமண்டபம் அசோக் நகர் பிரதான சாலை பகுதியில் வசித்து வருபவர் செல்லக்கிளி (வயது 61). இவர் நேற்று அசோக் நகர் அருணா அவென்யூ பிரதான சாலையில் உள்ள ஒரு வாட்டர் சர்வீஸ் அருகே நடந்து சென்று கொண்டிருந்த போது இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு மர்ம நபர்கள் அவர் கழுத்தில் அணிந்திருந்த 7.5 சவரன் தாலிச் செயினை பறித்துக்கொண்டு தப்பிச்சென்றனர். இது குறித்து செல்லக்கிளி கண்டோன்மெண்ட் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மற்றொரு சம்பவம்:
அதேபோல் திருச்சி சுப்ரமணியபுரம் பழைய பாண்டியன் தெருவில் வசித்து வருபவர் ஜான் ஜெரால் செல்வகுமார் . இவரது மகன் அந்தோணி அபிஷேக் (வயது 19). இவர் நேற்று சுப்பிரமணியபுரம் பழைய பாண்டியன் தெருவில் நின்று கொண்டிருந்த போது அங்கு இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் அவர் கையில் வைத்திருந்த செல்போன் மற்றும் பணம் 2000 ரூபாயை பறித்துச் சென்றனர். இது குறித்து அந்தோணி அபிஷேக் கே.கே.நகர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து சுப்பிரமணியபுரம் ரங்கா நகரைச்சேர்ந்த ஜெட்லி ஆண்ட்ரூஸ் (வயது19), பொன்மலை டீசல் காலனி பகுதியை சேர்ந்த சிறுவன் மற்றும் சுப்ரமணியபுரம் பகுதியை சேர்ந்த சிறுவன் என 2சிறுவர்கள் உட்பட மூன்று பேரை போலீசார் கைது செய்தனர். இதில் கைது செய்யப்பட்ட இரண்டு சிறுவர்களையும் சிறுவர்கள் பராமரிப்பு இல்லத்தில் அனுமதித்தனர்.