திருச்சியில் போலீஸ் இன்ஸ்பெக்டர் வீடு, பூசாரி வீட்டில் திருடிய 4 கொள்ளையர்கள் கைது.
ரூ.1லட்சம் பணம், வெள்ளி பொருட்கள் பறிமுதல்.
திருச்சி ஸ்ரீரங்கம் மேல உத்தர விதியைச் சேர்ந்தவர் ஸ்ரீஹரா (வயது 40). கோவில் பூசாரி. இவரது வீட்டின் பூட்டை உடைத்து வெள்ளி டம்ளர், வெள்ளி கிண்ணம், வெள்ளி கிண்டி உள்ளிட்ட வெள்ளி பொருட்கள் மற்றும் பணத்தை மர்ம நபர்கள் சமீபத்தில் திருடிச்சென்று விட்டனர்.
இதே போல் புலி மண்டபம் சாலையில் உள்ள போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் வீட்டிலும் வெள்ளி பொருட்கள் திருடு போனது. மூலத்தோப்பு ஆண்டாள் நகரை சேர்ந்த பாஸ்யம் என்ற கோவில் குருக்கள் வீட்டிலும் டி.வி,தங்க நகைகள் பணம் திருடு போனது. மேலும் கத்தியை காட்டி பலரிடம் வழிப்பறி சம்பவங்களும் நடந்தன.
இது தொடர்பாக ஸ்ரீரங்கம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்நிலையில் இன்ஸ்பெக்டர் பெரியசாமி தலைமையிலான போலீசார் குற்றவாளிகளை பிடித்து வெள்ளி பொருட்கள் மற்றும் பணத்தை பறிமுதல் செய்தனர். மேற்கண்ட வழக்குகளில் ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த பாலாஜி, சரவணன், அமாவாசை என்கிற கோவிந்தராஜ், ராஜா ஆகிய 4 பேரை கைது செய்தனர். அவர்களிடம் வெள்ளி மற்றும் தங்க நகைகளை விற்ற வகையில் கிடைத்த ரூ1. லட்சம் பணம் மற்றும் ரூ. 25 ஆயிரம் மதிப்பிலான வெள்ளிப் பொருட்கள், டி.வி. உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டது. இவர்கள் மீது பல்வேறு வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.