திண்டுக்கல் மாவட்டம் அருள்மிகு பழநி தண்டாயுதபாணி சுவாமி மலை கோயிலில் நடைபெற்ற உண்டியல் எண்ணிக்கையில் 4 கோடியே 67 இலட்சத்து 49 ஆயிரத்து 356 ரூபாய் பணத்தை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியுள்ளனர்.
மேலும், வெளிநாட்டு கரன்சிகள் 1069 நோட்டுகள் கிடைத்துள்ளது. உண்டியலில் பக்தர்கள் காணிக்கையாக தங்கம் 1012 கிராமும், வெள்ளி 17, 062 கிராமும் கிடைத்துள்ளது.
அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான திண்டுக்கல் மாவட்டம் பழனியில் அமைந்துள்ள அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலுக்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து மட்டுமல்லாது ஆந்திரா, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து பக்தர்கள் வருகை தருவர்.
இவ்வாறு வருகை தரும் பக்தர்கள் படிப்பாதை, யானை பாதை, மின் இழுவை ரயில், ரோப் கார் சேவை வழியாக மலைக்கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்வது வழக்கம். இந்த கோவிலின் அடிவாரம் முதல், கடைகள், பாதுகாப்பு, துப்புரவு பணி என அனைத்தும் இந்து சமய அறநிலையத்துறை மூலமே மேற்கொள்ளப்படுகிறது.

பொதுவாக வெள்ளி, சனி ,ஞாயிறு தினங்களில் பக்தர்கள் கூட்டம் அதிக அளவில் காணப்படும் மின் இழுவை ரயில் ,ரோப்கார் நிலையத்தில் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்வார்கள். மேலும் தைப்பூசம், பங்குனி உத்திரம், சூரசம்ஹாரம், கார்த்திகை, கந்த சஷ்டி உள்ளிட்ட பண்டிகைக் காலங்களில் பக்தர்கள் கூட்டம் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. நாளொன்றுக்கு லட்சக்கணக்கான பக்தர்கள் கோவிலில் திரள்வார்கள்.
அவ்வாறு கோவிலுக்கு வரும் பக்தர்கள் கோவில் வளாகத்தின் பல்வேறு பகுதிகளில் பல்வேறு பகுதிகளில் வைக்கப்பட்டுள்ள சிறிய மற்றும் பெரிய உண்டியல்களில் தங்கள் காணிக்கைகளை செலுத்துகின்றனர் பணமாகவும் தங்கம் வெள்ளி நகைகளாகவும் மற்றும் பிற பொருட்களை காணிக்கையாக செலுத்துகின்றனர். இந்த பணமானது மாதம் ஒருநாள் எண்ணப்படுவது வழக்கம்.
திருக்கோயில் வளாகத்தில் கல்லூரி மாணவர்கள் தன்னார்வலர்கள் வங்கி ஊழியர்கள் பணத்தை எண்ணும் பணியில் ஈடுபடுவது வழக்கம்.
இந்த நிலையில் இந்த மாதம் பழனி முருகன் கோவிலில் பக்தர்கள் செலுத்திய உண்டியல் காணிக்கை எண்ணும் பணி மலை மீது நடைபெற்றது. உண்டியல் எண்ணிக்கையில் வங்கி ஊழியர்கள், கோயில் ஊழியர்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள், கல்லூரி பேராசியர்கள் கலந்து கொண்டனர்.
பழனி கோயில் உண்டியல்கள் திறக்கப்பட்டு மலைக்கோயில் கார்த்திகை மண்டபத்தில் வைத்து எண்ணப்பட்டது. இதில் இரண்டு நாளில் பக்தர்களின் காணிக்கை வரவு மொத்தம் 4 கோடியே 67 இலட்சத்து 49 ஆயிரத்து 356 ரூபாய் கிடைத்தது.
வெளிநாட்டு கரன்சிகள் 1069 நோட்டுகள் கிடைத்துள்ளது. உண்டியலில் பக்தர்கள் காணிக்கையாக தங்கம் 1012 கிராமும், வெள்ளி 17062 கிராமும் கிடைத்து உள்ளது.