துணை சபாநாயகர் ரவிசங்கர் மது போதையில் தான் என்னை தாக்கினார், திருச்சி எஸ்.பி.அலுவலகத்தில் கார்த்திக்குமார் பேட்டி
துறையூரை சேர்ந்த கார்த்திக் என்பவரை துணை சபாநாயகர் தாக்கிய விவகாரம் – பாதிக்கப்பட்ட நபருக்கு சம்மன் அனுப்பிய காவல்துறை – நேரில் ஆஜராக வந்த கார்த்தியை திருப்பி அனுப்பி அலைக்கழிக்கும் போலீசார் .
திருச்சி மாவட்டம் துறையூர் சேர்ந்தவர் கார்த்திக் குமார் இவர் கடந்த தீபாவளி அன்று துறையூர் எம்எல்ஏவும் துணை சபாநாயகர் ஆன ரவிசங்கரை சந்தித்து அவருடைய தொகுதி பிரச்சனை தொடர்பாக மனு அளிக்க சென்றுள்ளார், அப்போது துணை சபாநாயகர் ரவிசங்கர் கார்த்தி குமாரை சரமாரியாக தாக்கினார், இது தொடர்பான வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. தாக்குதலில் காயம் அடைந்த கார்த்தி திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக மன்னச்சநல்லூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
கார்த்தி புகார் அளித்த நிலையில் அவரை திருச்சி மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் 16 ஆம் தேதியான இன்று திங்கட்கிழமை நேரில் ஆஜராக வேண்டும் எனக் கூறி சம்மன் அனுப்பப்பட்டது. அதன்படி கார்த்திக் குமார் இன்று திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு தன்னுடைய வழக்கறிஞர்களுடன் ஆஜராக வருகை தந்தார். ஆனால் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் வேறு வழக்கு தொடர்பாக வெளியே சென்று இருப்பதால் நாங்கள் தொலைபேசியில் தொடர்பு கொள்ளும்போது மீண்டும் வந்தால் போதும் எனக் கூறி போலீசார் அவர்களை அனுப்பி வைத்தனர்.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய கார்த்திக் குமாரின் வழக்கறிஞர் பொன்.முருகேசன்,
புகார் அளித்த எங்களை விசாரணைக்கு ஆஜராக கூறியதால் இன்று வருகை தந்தோம் ஆனால் ஏ டி எஸ் பி வேறு வழக்கில் இருப்பதால் எங்களை திருப்பி அனுப்பி விட்டனர். இந்த வழக்கில் முதலில் துணை சபாநாயகர் மீது புகார் அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்காமல் சமரசம் பேச அழைத்த மண்ணச்சநல்லூர் காவல் ஆய்வாளர் கிருபாநிதி மீதும் வழக்கு பதிவு செய்ய வேண்டும் , அதன் பின்பு இந்த விசாரணை நடத்த வேண்டும் என நாங்கள் கூறுவோம் . மேலும் இது தொடர்பாக உயர் நீதிமன்றத்திலும் வழக்கு தாக்கல் செய்ய உள்ளோம். பாதிக்கப்பட்ட நபரை இன்று விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என தெரிவித்தார்கள் அதன் அடிப்படையில் நாங்கள் வருகை தந்தோம் ஆனால் காவல்துறை அதிகாரிகள் எங்களை வேறு நாள் வரக்கூறி விட்டனர் . நாங்கள் வருவதை அறிந்த செய்தியாளர்கள் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு வருகை தந்ததாலும் எங்களை திட்டமிட்டு அலைக்கழிப்பதற்காகவும் இவ்வாறு செய்கிறார்கள் மேலும் இதனை கால தாமதப்படுத்தி இந்த விவாகரத்தை கிடப்பில் போட்டு விடலாம் எனவும் நினைக்கிறார்கள், ஆனால் நாங்கள் அவ்வாறு விடமாட்டோம் காவல்துறையினரிடமிருந்து எங்களுக்கு நீதி கிடைக்கும் என நாங்கள் நம்பவில்லை அதனால் தான் உயர் நீதிமன்றத்தை நாட முடிவு எடுத்துள்ளோம். துணை சபாநாயகர் மீது இவ்வளவு புகார் வந்து முதலமைச்சர் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என தெரியவில்லை அவர் கட்சி எம்எல்ஏக்களை காப்பாற்ற மட்டுமே நினைக்கிறார் உடனடியாக துணை சபாநாயகர் மீது அவர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார்.
கார்த்திக் குமார் பேசுகையில்,
நான் மது அருந்துவிட்டு துணை சபாநாயகர் வீட்டிற்கு சென்றதாக கூறுகிறார்கள் ஆனால் அதில் உண்மை இல்லை மாறாக அவர்தான் மது போதையில் என்னை தாக்கினார் அவர் வீட்டிலிருந்து வெளியே வரும்போது என்னை அடிக்கும் நோக்கில் தான் வந்தார் . அதனால் தான் நான் முன்கூட்டியே செல்போனில் வீடியோவை ஆன் செய்து வைத்தேன். வேறு யாரும் என்னை அங்கு அனுப்பவில்லை நான் அவரை சென்று சந்தித்த நேரம் மாலை 6:30 மணி ஆனால் திட்டமிட்டு 10.30 மணிக்கு தான் அவர் வீட்டுக்கு சென்றதாக பொய் பரப்புகிறார்கள். நான் மது வாங்கியது உண்மை குலதெய்வத்திற்கு படைக்க தான் வாங்கினேன் அதை என் வண்டியில் இருந்து வேறு யாரோ எடுத்து குடித்து விட்டார்கள், அவர்களை சாமி தண்டித்துக் கொள்ளும்.
இந்த விவகாரத்தில் நீதி கிடைக்க வேண்டும் கட்சியிலும் துணை சபாநாயகர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

