தமிழக சட்டமன்றப் பொதுத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், வாக்குச்சாவடிக்கு வர இயலாத வாக்காளர்களுக்காக இந்திய தேர்தல் ஆணையம் பல்வேறு சிறப்பு வசதிகளைச் செய்துள்ளது.
அதன் ஒரு பகுதியாக, திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் 85 வயதிற்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் தங்களது வாக்குகளை தபால் மூலம் செலுத்த மாவட்ட நிர்வாகம் விரிவான ஏற்பாடுகளைச் செய்துள்ளது.
மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சித்தலைவருமான வே.சரவணன் வெளியிட்டுள்ள தகவலின்படி:
85 வயதிற்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள்.40 சதவீதத்திற்கும் மேல் உடல் பாதிப்புடைய மாற்றுத்திறனாளிகள் தபால் வாக்கு செலுத்தலாம்.
திருச்சி மாவட்டத்தில் உள்ள 9 சட்டமன்றத் தொகுதிகளிலும் மொத்தம் 16,327 மூத்த குடிமக்கள் மற்றும் 22,406 மாற்றுத்திறனாளிகள் என மொத்தம் 38,733 பேர் இந்தப் பட்டியலின் கீழ் வருகின்றனர்.
தபால் வாக்கு செலுத்த விருப்பமுள்ள வாக்காளர்களுக்கு, அவர்கள் வசிக்கும் இடத்திற்கே நேரில் சென்று படிவம் 12B (Form 12B) வழங்கும் பணி கடந்த மார்ச் 16 முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் (BLO) ஒவ்வொரு வீட்டிற்கும் சென்று இந்தப் படிவங்களை வழங்கி வருகின்றனர்.
வாக்காளர்கள் இந்தப் படிவத்தைப் பெற்ற 5 நாட்களுக்குள் தங்களது விருப்பத்தைப் பூர்த்தி செய்து மீண்டும் அதே அலுவலரிடம் வழங்க வேண்டும்.
தபால் வாக்கு செலுத்த விருப்பம் தெரிவித்து விண்ணப்பித்தவர்கள், பின்னர் தேர்தல் நாளன்று வாக்குச்சாவடிக்கு நேரில் சென்று மீண்டும் வாக்களிக்க முடியாது.
மாற்றுத்திறனாளிகள் தபால் வாக்கிற்கு விண்ணப்பிக்கும்போது, தகுதியான மருத்துவரால் வழங்கப்பட்ட மருத்துவச் சான்றினை இணைப்பது கட்டாயமாகும்.
வாக்குச்சாவடி நிலை அலுவலர் முதல்முறை செல்லும்போது வாக்காளர் வீட்டில் இல்லை என்றால், மீண்டும் ஒருமுறை செல்வார். இருமுறையும் வாக்காளர் வீட்டில் இல்லையென்றால், அவர் தபால் வாக்கு செலுத்த விரும்பவில்லை எனக் கருதப்படுவார்.
தேர்தல் ஆணையத்தின் இந்த முன்னெடுப்பு, ஜனநாயகக் கடமையாற்ற வயது மற்றும் உடல்நிலை தடையாக இருக்கக்கூடாது என்பதை உறுதிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.
விருப்ப மனு அளித்துள்ள அனைவருக்கும் எவ்வித சிரமமும் இன்றி தபால் வாக்கு செலுத்தத் தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்படும் என மாவட்ட ஆட்சியர் சரவணன் உறுதி அளித்துள்ளார்.

