திமுகவின் கோட்டையாகத் திகழும் லால்குடியை, 20 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வசமாக்க லீமா ரோஸை களம் இறங்குகிறது அதிமுக.
தமிழக சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் 35 நாட்களே உள்ள நிலையில், திருச்சி லால்குடி தொகுதியில் அரசியல் களம் முன்னெப்போதும் இல்லாத வகையில் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.
சுமார் 20 ஆண்டுகளாக திமுகவின் வசம் உள்ள இந்தத் தொகுதியைக் கைப்பற்ற, அதிமுக ஒரு பலமான வியூகத்தை வகுத்துள்ளது. சமீபத்தில் ஐஜேகே கட்சியிலிருந்து விலகி அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்த லீமா ரோஸ் மார்ட்டின், இம்முறை அத்தொகுதியின் அதிமுக வேட்பாளராகக் களம் இறங்குவது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது. லாட்டரி தொழிலதிபர் மார்ட்டினின் மனைவியும், தவெக நிர்வாகி ஆதவ் அர்ஜுனாவின் மாமியாரமான இவரது வருகை தொகுதிக்குள் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதிமுகவில் இணைந்த கையோடு லீமா ரோஸ் மார்ட்டின் தனது தேர்தல் பணிகளை அதிரடியாகத் தொடங்கியுள்ளார். தேர்தல் தேதி அறிவிக்கப்படுவதற்கு முன்பாகவே, லால்குடி தொகுதி முழுவதும் உள்ள அதிமுக நிர்வாகிகளையும் தொண்டர்களையும் ‘பரிசு மழையில்’ நனைய வைத்துள்ளதாகக் கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி, தொகுதி வாக்காளர்களுக்கும் பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் பரிசுப் பொருட்களையும் வாரி வழங்கி வருகிறாராம் லீமா ரோஸ்.கட்சித் தலைமையுடன் நெருங்கிய தொடர்பில் இருப்பதால், சீட் தங்களுக்குத்தான் என்ற நம்பிக்கையில் அவர் இப்போதே களப்பணிகளை முடுக்கிவிட்டுள்ளார்.
அமைச்சர்கள் கே.என்.நேரு மற்றும் அன்பில் மகேஷ் என திமுகவின் இரு பெரும் ‘பவர் சென்டர்கள்’ ஆதிக்கம் செலுத்தும் திருச்சி மாவட்டத்தில், லீமா ரோஸ் மார்ட்டின் நம்பிக்கையுடன் களம் இறங்குவதற்கு வலுவான சமூகக் காரணிகள் பின்னணியாக உள்ளன. லால்குடி தொகுதியில் சுமார் 40 சதவீத வாக்காளர்கள் உடையார் சமூகத்தைச் சேர்ந்தவர்கள். லீமா ரோஸ் மார்ட்டின் உடையார் சமுதாயத்தை சேர்ந்தவர்,அதிமுக மகளிர் அணித் தலைவியாகப் பணியாற்றியது அவருக்குப் பெரும் பலமாகப் பார்க்கப்படுகிறது. அத்துடன், அவர் கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்தவர் என்பதால் சிறுபான்மையின மக்களின் வாக்குகளையும் கணிசமாகப் பெற முடியும் என அதிமுக தலைமை கணக்குப் போடுகிறது.
பண பலம், சமூக ஆதரவு மற்றும் சிறுபான்மையின வாக்குகள் என மும்முனை வியூகத்துடன் லீமா ரோஸ் மார்ட்டின் களம் காண்பது, திமுகவினரிடையே ஒருவித கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. 2006 முதல் திமுகவின் கோட்டையாகத் திகழும் லால்குடியை, 20 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அதிமுகவின் வசமாக்க அக்கட்சியினர் தீவிரமாக உழைத்து வருகின்றனர். அதிமுக நிர்வாகிகள் அனைவரும் ஒருங்கிணைந்து லீமா ரோஸ் மார்ட்டினுக்கு ஆதரவாகப் பணியாற்றும் பட்சத்தில், இந்தத் தேர்தல் லால்குடி தொகுதியின் வரலாற்றில் ஒரு முக்கிய மாற்றத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

