Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

உளவுத்துறை அதிகாரி மூலம் வேட்பாளர்கள் ஹிஸ்டை தயார் செய்து உள்ள எடப்பாடி .சீனியர்கள் அதிர்ச்சி.

0

'- Advertisement -

தமிழக அரசியல் களம் விறுவிறுப்பாகி வருகிறது.. இந்த நேரத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மேற்கொண்டு வரும் நகர்வுகள் அக்கட்சியின் சில பாரம்பரியத்தையே மாற்றி அமைப்பதாக உள்ளதாக கூறப்படுகிறது.

அதை பற்றின ஒரு செய்தி தற்போது கசிந்துள்ளது.

பொதுவாக அதிமுக போன்ற பெரிய கட்சிகளில் வேட்பாளர் தேர்வு என்பது மாவட்டச் செயலாளர்களின் சிபாரிசுகளின் அடிப்படையிலேயே அமையும்.. ஆனால், இந்த முறை எடப்பாடி பழனிசாமி ஒரு மாறுபட்ட அணுகுமுறையைக் கையாண்டுள்ளார்.

அதாவது ஒவ்வொரு தொகுதிக்கும் தலா 3 நபர்களைக் கொண்ட உத்தேச பட்டியலை மாவட்ட செயலாளர்களிடமிருந்து பெற்ற தலைமை, அதில் பெரும் மாற்றங்களை செய்துள்ளது.. அந்தந்த மாவட்டங்களில் செல்வாக்கு செலுத்தும் சீனியர்களின் பரிந்துரைகளை நிராகரித்துவிட்டு, கட்சி தலைமை ஏற்கனவே இறுதி செய்து வைத்திருந்த பெயர்களை அந்த லிஸ்ட்டில் இணைத்து, அதையே அதிகாரப்பூர்வ பட்டியலாக மீண்டும் மாவட்ட நிர்வாகிகளிடம் சமர்ப்பிக்க உத்தரவிட்டுள்ளதாம்..

 

தலைமையின் இந்த நேரடி தலையீடும், தங்களின் பரிந்துரைகள் புறக்கணிக்கப்பட்டதும் மண்டல அளவிலான முக்கியத் தலைவர்களிடையே ஒருவித அரசியல் திகைப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த அதிரடி மாற்றங்களுக்குப் பின்னால் கடந்த தேர்தலின் கசப்பான அனுபவங்கள் மிக முக்கிய காரணமாகக் கருதப்படுகின்றன.. கடந்த 2021 தேர்தலின்போது மாவட்ட செயலாளர்கள், முன்னாள் அமைச்சர்களின் விருப்பத்திற்கேற்ப வேட்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.

இருந்தாலும் தேர்தல் முடிவுகளுக்கு பிறகு மேற்கொள்ளப்பட்ட விரிவான ஆய்வில், சில முக்கிய நிர்வாகிகள் ஆளுங்கட்சிக்கு சாதகமாக செயல்படும் நோக்கில், வலிமையற்ற வேட்பாளர்களை பரிந்துரைத்து உள்ளடி வேலைகளில் ஈடுபட்டது அம்பலமானது..

இதுபோன்ற உட்கட்சி துரோகங்களால் ஏற்படும் இழப்புகளைத் தடுக்கவும், கட்சியின் வெற்றி வாய்ப்பை உறுதி செய்யவும், வேட்பாளர் தேர்வு தொடர்பான இறுதி முடிவை எடப்பாடி பழனிசாமி தனது நேரடிப் பார்வையின் கீழ் கொண்டு வந்துள்ளாராம்.. இந்த வேட்பாளர் லிஸ்டை தயார் செய்வதற்காக, உளவுத்துறையில் பணியாற்றி ஓய்வு பெற்ற ஒரு முன்னாள் உயர் அதிகாரியின் தலைமையில் ஒரு ரகசியக் குழுவை எடப்பாடி பழனிசாமி அமைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்தக் குழு கடந்த சில மாதங்களாக தமிழகம் முழுவதும் ரகசிய ஆய்வுகளை மேற்கொண்டது, ஒவ்வொரு தொகுதியிலும் மக்களின் எதிர்பார்ப்பு என்ன? எந்த சமூகப் பின்னணி கொண்ட வேட்பாளர் வெற்றி பெறுவார்? மற்றும் உத்தேசிக்கப்பட்ட வேட்பாளர்களின் தனிப்பட்ட நற்பெயர் என்ன? என்பது குறித்த துல்லியமான தரவுகளை அந்த அதிகாரி தலைமையிலான குழு தலைமைக்கு சமர்ப்பித்ததாம்.

இந்த தரவுகளின் அடிப்படையிலேயே 160 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் தற்போது இறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றது.

தனிப்பட்ட விருப்பு வெறுப்புகள் மற்றும் சிபாரிசுகளை கடந்து, கள எதார்த்தத்தை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு வேட்பாளர்களை தேர்வு செய்யும் எடப்பாடி பழனிச்சாமியின் இந்த புரொபஷனல் அணுகுமுறை, அதிமுகவிற்குள் ஒரு புதிய கலாச்சாரத்தை விதைத்துள்ளது.

சீனியர்களின் ஆதிக்கம் குறைக்கப்பட்டு, நேரடியாகத் தலைமையின் விசுவாசிகளும், வெற்றி வாய்ப்புள்ள இளைய தலைமுறையினரும் முன்னிறுத்தப்படுவது, அதிமுகவின் எதிர்கால அரசியலில் ஒரு முக்கியமான திருப்புமுனையாகப் பார்க்கப்படுகிறது.. இந்த அதிரடி மாற்றங்கள் தேர்தல் களத்தில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.