Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

7வது முறையும் நாம் தான். இனி எப்போதும் நாம் தான்.திருச்சி மாநாட்டில் ஸ்டாலின்.

0

'- Advertisement -

நான் அடித்துச் சொல்கிறேன். இந்த ஸ்டாலின் இருக்கும் வரை தமிழ்நாட்டை பாஜக ஆளவே முடியாது என்று திருச்சியில் நடந்த திமுக மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் ஆவேசமாகப் பேசினார்.

திமுக சார்பில், சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு ‘ஸ்டாலின் தொடரட்டும்; தமிழ்நாடு வெல்லட்டும்’ என்றக் கருப்பொருளில், மாபெரும் நிர்வாகிகள் சந்திப்பு 12 வது மாநில மாநாடு திருச்சி சிறுகனூரில் நேற்று மாலை நடைபெற்றது.

மாநாட்டில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசிய முழு விபரம்:-

எத்தனையோ திருப்புமுனைக்கு அடித்தளமிட்ட தீரர்கள் கோட்டமாம் திருச்சியில் இந்த மாநாட்டை நடத்துகிறோம். இந்த மாநாடு எதற்கு என கேட்கின்றனர்.

ஒரு கிரிக்கெட் மேட்சில் முதல் பாலிலிருந்து ரன் அடிப்பது முக்கியம். அதேபோல இறுதி ஓவர்களில் அடித்து ஆடி இறுதிப்பந்தில் வெற்றிப் பந்தாக சிக்ஸர் அடித்து வெற்றி பெறுவது என்பது பிரம்மாண்ட இறுதி வெற்றியாக இருக்கும். அப்படிப்பட்ட வெற்றியை 2026ல் பெறுவதற்காகத் தான் இந்த மாநாடு. நாம் செய்த சாதனைகளை மட்டும் நம்மால் முழுமையாக சொல்ல முடியாத அளவுக்கு பட்டியல் உள்ளது. அதையெல்லாம் மக்களிடம் சொல்லவேண்டும்.

கனிமொழி தலைமையில் தயாராகும் விரிவான தேர்தல் அறிக்கை விரைவில் வெளியிடப்படும். மற்ற அரசியல் கட்சிகள் எல்லாம் இன்ஸ்டால்மென்டில் தேர்தல் அறிக்கை வெளியிடுகின்றனர். அதுவும் திமுக திட்டங்களை காப்பி அடித்து, டாப்அப் செய்து வெளியிடுகின்றனர். திமுக அரசின் திட்டங்களை (மகளிர்க்கு இலவச பேருந்து,மாதம் ரூபாய் ஆயிரம்,இலவச வீட்டு மனை பட்டா,இலவச மருத்துவ முகாம்) தடுக்கவோ நிறுத்தவோ எந்தக் கட்சியாவது யோசிக்க முடியாது. எவராலும் மாற்ற முடியாத திட்டங்கள் தான் மு.க.ஸ்டாலின் திட்டங்கள். அவர்கள் தேர்தல் அறிக்கைக்கு கன்டன்ட் கொடுப்பதே இந்த ஸ்டாலின் திட்டங்கள் தான்.

அதனால் தான் உறுதியோடு சொல்கிறேன், இந்தத் திட்டங்கள் தமிழ்நாட்டில் இருக்கும் வரை முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் தான் தமிழ்நாட்டை ஆளுவான். நாம் இவ்வளவும் செய்துவிட்டு மக்களிடம் வாக்கு கேட்கிறோம். ஆனால் அதிமுக கூட்டணி …. மன்னிக்கவும். அப்படி சொன்னால் மோடியும், அமித்ஷாவும் கோபித்துக்கொள்வர். கூட்டணிக்கு பெயர் வைக்க முடியாத நிலையில் தான் அதிமுக உள்ளது.

என்டிஏ கூட்டணி தமிழ்நாட்டுக்கு என்ன செய்துள்ளது. நன்மை செய்ய வேண்டும் ஆட்சிப் பொறுப்புக்கு வரவேண்டும் என்ற எண்ணம் அவர்களுக்கு இருந்திருந்தால் அடிப்படையாக மாநிலத்துக்கு கேட்டதையாவது தந்திருக்க வேண்டும். எதுவுமே இல்லை. பாஜக தந்ததெல்லாம் ஆளுநர் மூலம் குடைச்சல். மாணவர்கள் உயிரோடு விளையாடும் நீட் தேர்வு, இந்தி திணிப்பு, மிரட்டிப் பார்க்க ரெய்டுகள். இப்படிப்பட்ட ஆட்சி தான் பிரதமர் மோடி சொல்லும் என்டிஏ ஆட்சி. தமிழ்நாட்டுக்கு எந்த நன்மையும் செய்யாத இவர்கள் தான் நம்மை எதிர்த்து நிற்கின்றனர்.

தமிழ்நாடு மீது எந்தளவுக்கு வன்மம் இருக்கிறது என்றால், தேர்தல் வருகிறது என்று கூட கவலைப்படாமல் நமக்கான எதையும் அறிவிக்க இவர்களுக்கு மனசு வரவில்லை. இப்படித் திட்டமிட்டு தமிழ்நாட்டை புறக்கணிக்க என்டிஏ கூட்டணிக்கு தமிழக மக்கள் எப்படி வாக்களிப்பர்? எந்த நம்பிக்கையில் தமிழகம் வருகிறீர்கள்?

நாம் கேட்பதையெல்லாம் ‘நோ’ என்று சொல்லும் என்டிஏவுக்கு தமிழ்நாடும் ‘நோ’ என்று தான் சொல்லும். இங்க உங்களுக்கு எப்போதம் ‘நோ என்ட்ரி’ தான்.

திமுக தேர்தலின் போது மட்டும் மக்களிடம் வரும் வரக்கூடிய கட்சி அல்ல. மக்களின் உரிமைக்காக எப்போதும் களத்தில் நிற்கும் கட்சி. தமிழ்நாடு, தமிழ் மொழி, பண்பாடு உண்மையான எதிரி யார் என எங்களுக்குத் தெரியும். அந்த எதிரியை எதிர்க்கும் ஒரே இயக்கம் திமுக என்பது மக்களுக்குத் தெரியும்.

 

அதிமுக முகமூடியை போட்டுக் கொண்டு வந்தால் தமிழக மக்களுக்கு உங்களை அடையாளம் தெரியாமல் போய்விடுமா? உங்கள் முகத்திரையை கிழித்து மக்களிடம் நாங்கள் அம்பலப்படுத்துவோம். தமிழ்நாட்டை எப்படியாவது நம்மிடமிருந்து விழுங்கிவிடலாம் என காவிக்கூட்டம் நினைக்கிறது. இந்த கருப்பு-சிவப்பு பட்டாளம் இருக்கும் வரை அது நடக்காது. உங்க அப்பனே வந்தாலும் நடக்காது.அதிமுக என்ற கட்சியை கொஞ்சம் கொஞ்சமாக விழுங்குகின்றனர்.

பிஹார் மாநிலத்தில் இதுவரை பாஜக முதல்வர் இருந்ததே இல்லை. நிதிஷ்குமாரை முன்னிறுத்தி தேர்தலில் வெற்றி பெற்று காரியம் ஆனதும் அவரை ஓரம்கட்டி பாஜக முதல்வரை உள்ளே கொண்டு வரப்போகின்றனர். இதையே தான் தமிழ்நாட்டில் கொண்டு வர முயற்சிக்கின்றனர். நான் அடித்து சொல்கிறேன் இந்த ஸ்டாலின், திமுக இருக்கும் வரை தமிழ்நாட்டை ஆளவே முடியாது. நீங்கள் அந்தர் பல்டி அடித்தாலும், என்ன முகமுடி போட்டாலும், புதுசு புதுசாக யாரை கூட்டி வந்தாலும் எத்தனை ஏவல் அமைப்புகளை வைத்து மிரட்டிப்பார்த்தாலும் தமிழ்நாடு எப்போதும் உங்களுக்கு அவுட் ஆஃப் கன்ட்ரோல் தான்.

கொள்கை அடிப்படையில் கூட்டணி வேட்பாளர்களுக்கு உழைக்க வேண்டும். தமிழ்நாட்டை அண்ணா, கருணாநிதி, மக்கள் திலகம் எம்ஜிஆர், அம்மையார் ஜெயலலிதா ஆகியோர் முதல்வராக வேண்டும் என மக்கள் ஓட்டுப்போட்டு தேர்ந்தெடுத்தனர். அவர்களுக்கு பிறகு ஓட்டுப்போட்டு வெற்றி பெற வைத்து இந்த ஸ்டாலினை தான். கடந்த 5 ஆண்டு சாதனையைக் காட்டிலும் அடுத்த 5 ஆண்டில் இன்னும் அதிக சாதனைகள் செய்வார் என மக்களிடம் சொல்லுங்கள்.

 

தமிழ்நாடு நம்பர் 1 மாநிலமாக எங்கள் தலைவருக்கு ஆதரவு கொடுங்கள் என வீடு வீடாக சொல்லுங்கள். நம்மால் பயனடைந்தவர்கள் உங்களை நிச்சயம் வரவேற்பார்கள். திமுக ஆட்சி தான் சொன்னதை செய்யும் சொல்லாததையும் செய்யும் என மக்களுக்குத் தெரியும். அதனால் தேர்தலுக்காக உழைக்க நான் ரெடி நீங்கள் ரெடியா? நம் மண், மொழி, மக்களை காக்க, திமுக 2.0வுக்கு நான் ரெடி. நீங்கள் ரெடியா? நம் வெற்றி திமுக வெற்றி அல்ல ஒட்டுமொத்த தமிழ்நாட்டின் வெற்றி, அதை உணர்ந்து உழைக்க வேண்டும். 7வது முறையும் நாம் தான். இனி எப்போதும் நாம் தான். திருச்சியின் எழுச்சி தமிழ்நாடு எங்கும் பரவட்டும். திராவிட மாடல் ஆட்சி தொடரட்டும், தமிழ்நாடு வெல்லட்டும். மீண்டும் வெல்வோம் ஒன்றாக. இவ்வாறு தமிழக முதல்வர் மு.க . ஸ்டாலின் தொண்டர்கள் இடையே உரையாற்றினார்.

 

இந்த மாநாட்டினை திமுக முதன்மை செயலாளர் ,நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சருமான கே.என்.நேரு, சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தார்.

மேலும் இந்த நிகழ்ச்சியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மகேஷ் பொய்யா மொழி,ஸ்ரீரங்கம் சட்டமன்ற உறுப்பினர் பழனியாண்டி,பெரம்பலூர் பாராளுமன்ற உறுப்பினர் அருண் நேரு, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அன்பில் பெரியசாமி,லால்குடி சட்டமன்ற உறுப்பினர் சௌந்தரபாண்டியன்,மாவட்ட மருத்துவ அணி பொறுப்பாளர் மருத்துவர் கண்ணன்,.டாக்டர். ஏ. கே. சங்கர்,மத்திய மாவட்ட மகளிர் அணி துணை செயலாளரும் முன்னாள் ஒன்றிய கவுன்சிலருமான கங்கா பரமானந்தன்,மற்றும் நிர்வாகிகள் மோகன்ராஜ், அன்புராஜ்,மணிகண்டன்,தமிழரசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.