திருச்சியில் தூய்மை பணியாளர்களுக்கு நலவாரிய அட்டை வழங்கும் நிகழ்ச்சி – வாரிய தலைவர் பங்கேற்பு.
திருச்சி மாநகராட்சியில் தூய்மை பணியாளர்களுக்கு செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் குறித்த ஆய்வு கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மாநகராட்சி அலுவலக கூட்ட அரங்கில் இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இந்த நிகழ்விற்கு மாநகராட்சி மேயர் அன்பழகன், ஆணையர் மதுபாலன், துணை மேயர் திவ்யா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நிகழ்வில் சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு தூய்மை பணியாளர்கள் நல வாரிய தலைவர் திப்பம்பட்டி ஆறுச்சாமி கலந்து கொண்டு, பணியாளர்களுக்கு செயல்படுத்தப்பட்டுள்ள திட்டங்கள் குறித்து விளக்கிப் பேசினார். தொடர்ந்து சிறந்த தூய்மை பணியாளர்களுக்கு விருது மற்றும் நலவாரிய அட்டை வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில் மண்டல குழு தலைவர்கள் துர்கா தேவி, விஜயலட்சுமி கண்ணன், மாநகராட்சி உதவி ஆணையர்கள் மற்றும் மாமன்ற உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய நல வாரிய தலைவர் திப்பம்பட்டி ஆறுச்சாமி கூறுகையில்:-
திருச்சி மாவட்டத்தில் 5200 தூய்மை பணியாளர்களுக்கு நல வாரிய அட்டை வழங்கப்பட்டுள்ளது. ரூ.3 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது, மேலும் வழங்கப்பட உள்ளது. ரூ.5.5 லட்சம் மதிப்பிலான விபத்து உதவி தொகை வழங்கப்பட்டுள்ளது.
இன்று காலை தூய்மை பணியாளர்களுக்கு உணவு சமைக்கும், சமையல் கூடத்தை ஆய்வு செய்தேன். அங்கு சமையல் கூடம் சுத்தமாக உள்ளது. மிகுந்த பாதுகாப்போடு உணவு தயாரிக்கப்பட்டு வருகிறது. எந்த குறையும் இல்லை. இந்த உணவு திட்டத்தை செயல்படுத்திய முதல்வருக்கு நன்றி.
தூய்மை பணியாளர்கள் பாதுகாப்பு உபகரணங்கள் இன்றி பணிபுரிய கூடாது. பாதுகாப்பாக பணி புரிய வேண்டும்.
நெல்லை மாவட்டத்தில் துப்புரவு பணியாளர்களுக்கு வழங்கிய உணவு தரமாக இல்லை என குற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அதில் அதிகாலையில் உணவு சமைத்து அதை ஒரு டிபன் பாக்ஸில் வைத்து வழங்கப்பட்டுள்ளது. ஆனால் துப்புரவு பணியாளர்கள் காலதாமதமாக அந்த உணவை சாப்பிட்டு இருக்கிறார்கள். கிட்டத்தட்ட ஏழு மணி நேரத்துக்கு முன்பாக உணவு டிபன் பாக்ஸில் அடைக்கப்பட்டதால், அந்த உணவு கெட்டுப் போனதாக மாறி உள்ளது. ஆகையால் தான் அனைத்து இடங்களிலும் ஹாட் பாக்சில் உணவு வழங்க வேண்டுமென தெரிவித்துள்ளோம்.
துப்புரவு பணியாளர்கள் பணி நிரந்தரம் ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை குறித்து தமிழ்நாடு முதலமைச்சர் நடவடிக்கை எடுப்பார். துப்புரவு பணியாளருக்கு தேவையான அனைத்து திட்டங்களையும் செய்து கொண்டு தான் இருக்கிறார்.
மேலும் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் தனியாருக்கு கொடுக்கும் பணிகளில் மாற்றி அரசே எடுத்து நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை முதலமைச்சரிடம் முன் வைத்துள்ளோம் என தெரிவித்தார்.

