ஆர்.மனோகரனுக்கு ஸ்ரீரங்கத்தில் போட்டியிட வாய்ப்பு வழங்கி ஒரு தொகுதியை வீணாக இழப்பாரா? எடப்பாடி பழனிச்சாமி.
திருச்சி மாவட்டத்தின் மிக முக்கியமான தொகுதியான ஸ்ரீரங்கம், முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதா போட்டியிட்டு வென்றதன் மூலம் இந்திய அளவில் கவனம் பெற்றது.
அதிமுகவின் அசைக்க முடியாத கோட்டையாகக் கருதப்படும் இத்தொகுதியில், ஏறத்தாழ 3 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். இதில் பெரும்பான்மையினராக இருக்கும் முத்தரையர் சமூகத்தினர், பல தசாப்தங்களாக அதிமுகவின் வெற்றிக்கு முதுகெலும்பாக இருந்து வருகின்றனர். எம்.ஜி.ஆர் மறைவுக்குப் பிறகு நடைபெற்ற 9 தேர்தல்களில், ஜெயலலிதா போட்டியிட்ட ஒரு முறையைத் தவிர, மீதமுள்ள 8 முறையும் அதிமுக சார்பில் முத்தரையர் சமூகத்தைச் சேர்ந்தவர்களே வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டு வந்துள்ளனர்.
இந்நிலையில், வரும் தேர்தலில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி எடுக்கப்போகும் ஒரு முடிவு, இத்தொகுதியில் பெரும் அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. நீண்டகாலமாக முத்தரையர் சமூகத்தைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள் கு.ப.கிருஷ்ணன், மு.பரஞ்ஜோதி, எஸ்.வளர்மதி ஆகியோர் இத்தொகுதியின் முகங்களாக இருந்து வந்தனர். ஆனால், தற்போது குறைந்த எண்ணிக்கையிலான வாக்காளர்களைக் கொண்ட சமூகத்தைச் சேர்ந்த முன்னாள் அரசு கொறடா ஆர். மனோகரன், ஸ்ரீரங்கம் தொகுதியில் போட்டியிட காய் நகர்த்தி வருவதாகக் கூறப்படுகிறது.
இந்தத் தகவல் ஸ்ரீரங்கம் தொகுதி முத்தரையர் சமூகத்தினர் மற்றும் அதிமுக நிர்வாகிகள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தங்களின் பாரம்பரியமான தொகுதியை வேறு ஒருவருக்குத் தாரை வார்ப்பது சமூக அநீதியாக அமையும் என்று அவர்கள் கருதுகின்றனர். மு.பரஞ்ஜோதி, எஸ்.வளர்மதி, உள்ளிட்ட பல முக்கிய முத்தரையர் முகங்கள் கட்சித் தலைமைக்குத் தங்கள் விருப்பத்தைத் தெரிவிக்கக் காத்திருக்கும் வேளையில், மனோகரனின் வருகை அதிமுகவின் வாக்கு வங்கியில் பிளவை ஏற்படுத்துமோ என்ற அச்சம் எழுந்துள்ளது.
இவர் 2015 ஆம் ஆண்டு நடந்த இடைத்தேர்தல் மற்றும் 2016 சட்டமன்றத் தேர்தலில் திருவரங்கம் தொகுதியிலிருந்து, தமிழ்நாடு சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டு பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சராக சிறப்பாக பணியாற்றியவர்.
ஸ்ரீரங்கம் தொகுதியின் கள நிலவரம் குறித்து எடப்பாடி பழனிசாமிக்குத் தெரியாதது அல்ல என்று கூறும் உள்ளூர் நிர்வாகிகள், கட்சித் தலைமை எடுக்கும் முடிவு முத்தரையர் சமூகத்தினரைத் திருப்திப்படுத்துமா அல்லது அதிருப்தியில் ஆழ்த்து மா என்பதுதான் தற்போதைய மில்லியன் டாலர் கேள்வியாக உள்ளது. தொகுதியைத் தக்கவைக்க முத்தரையர்கள் மேற்கொள்ளும் இந்த அரசியல் போராட்டம், அதிமுகவின் தேர்தல் வியூகத்தில் ஒரு பெரும் சோதனையாக மாறியுள்ளது.
ஶ்ரீரங்கம் தொகுதியில் வளர்மதி வெற்றி பெற்று சிறப்பாக மக்களுக்கு கொண்டு சென்றவர் சிறப்பாக களப்பணி ஆற்றியவர். அதேபோன்று கடந்த தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்காத போதிலும் ஸ்ரீரங்கம் தொகுதியில் ஒவ்வொரு நிர்வாகி மற்றும் அதிமுக தொண்டர்கள் என பாகுபாடு இல்லாமல் அவர்கள் இல்ல நல்ல நிகழ்ச்சி மற்றும் துக்க நிகழ்ச்சிகளில் கண்டிப்பாக கலந்துகொண்டு தான் ஒரு முன்னாள் அமைச்சர் என்ற கெத்து இல்லாமல் சாதாரண அதிமுக தொண்டனாக சிறப்பாக இன்றும் தொடர்ந்து களப்பணியாற்றி வருபவர் வளர்மதி .இவருக்கு இந்த முறை ஸ்ரீரங்கத்தில் போட்டியிட சீட்டு வழங்கினால் பத்திரிகையாளர்களை தாக்கிய திமுக சட்டமன்ற உறுப்பினர் பழனியாண்டி மீதான எதிர்ப்பு மற்றும் தொகுதியில் எந்தவித கெட்ட பெயரும் இல்லாததால் மனம் அதில் எளிதாக வெற்றி பெற்று விடுவார் எனக் கூறப்படுகிறது.
இதுவே 2016 ல் திருச்சி மேற்கு தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு தோல்வி அடைந்து பின்புகடந்த தேர்தலில் திருச்சி கிழக்கு தொகுதியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் போட்டியிட்டு மண்ணைக் கவ்வியவர் ஆர். மனோகரன் என்பது குறிப்பிடத்தக்கது.எனவே மனோகரனுக்கு ஸ்ரீரங்கத்தில் போட்டியிட வாய்ப்பு வழங்கி ஒரு தொகுதியை வீணாக இழப்பாரா? அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி.

