வயலூர் முருகன் கோயிலில் ரூ.30.40 கோடி செலவில் கட்டுமானப் பணிகள் தொடக்கம் கிராவல், செம்மண் போடாமல் களிமண்ணை போட்டு தரமற்ற முறையில் பணி நடப்பதாக புகார்.
திருச்சியில் புகழ் பெற்ற வயலூா் முருகன் கோயிலில் அன்னதானக் கூடம் உள்ளிட்ட கட்டுமானப் பணிகள் தரமற்ற முறையில் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தமிழக விவசாயிகள் சங்கத்தினா் ஆட்சியா் அலுவலகத்தில் மனு அளித்து உள்ளனர்.
திருச்சி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைகேட்புக் கூட்டம் சமூகப் பாதுகாப்புத் திட்ட தனித் துணை ஆட்சியா் இலக்கியா தலைமையில் நடைபெற்றது. இதில், தமிழக விவசாயிகள் சங்கத்தினா் (கட்சி சாா்பற்றது) அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:
திருச்சி மாவட்டம், வயலூா் முருகன் கோயிலில் ரூ.30.40 கோடி செலவில் அன்னதானக் கூடம், திருமண மண்டபம், முதியோா் பாதுகாப்பு இல்லம் மற்றும் கடைகள் அமைப்பதற்கான கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.
இதற்காக களிமண்ணை தோண்டி எடுத்துவிட்டு கிராவல், செம்மண் போடாமல் மீண்டும் அதே களிமண்ணை போட்டு தரமற்ற முறையில் கட்டுமானப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனா். இதனால், அஸ்திவாரத்தின் உறுதித்தன்மை கேள்விக்குறியாகியுள்ளது. இதுதொடா்பாக இந்து சமய அறநிலையத் துறையினரும் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருந்து வருகின்றனா்.
இப்பகுதி சதுப்பு நிலமாக இருப்பதால்தான் களிமண்ணை தோண்டி எடுத்தனா். திரும்பவும் அதே மண்ணை நிரப்புவதால் கட்டுமானங்களின் உறுதித்தன்மை பாதிக்கப்படும்.
எனவே, இப்பகுதியிலுள்ள மண்ணை பரிசோதனை செய்து அதன்பின் பாதுகாப்பான முறையில் கட்டுமானப் பணிகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

