கீரிப்பிள்ளை கடித்த 3 மாதங்கள் பின் கீரிப்பிள்ளை போன்று செய்கைகளைச் செய்து பரிதாபமாக இறந்த 7 வயது சிறுவன்.
திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி அருகே உள்ள அம்மையப்பன் பகுதியைச் சேர்ந்த முத்து – தேவி தம்பதியினரின் மகன் நவீன் (வயது 7) கீரிப்பிள்ளை கடித்த பாதிப்பால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு நவீன் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தபோது, கோழிகளைப் பிடிக்க வந்த கீரிப்பிள்ளை சிறுவனின் கையைத் திடீரெனக் கடித்தது. அப்போது முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு சிறுவனுக்குத் திடீரெனக் காய்ச்சல் மற்றும் உடல்நலக் குறைவு ஏற்பட்டது.
உடனடியாகத் திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட நவீன், சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் நள்ளிரவு பரிதாபமாக உயிரிழந்தான்.
உயிரிழப்பதற்கு முன்னதாகச் சிறுவன் கீரிப்பிள்ளை போன்றே சில செய்கைகளைச் செய்ததாகக் கூறப்படும் நிலையில், சுகாதாரத்துறை அதிகாரிகளின் முன்னிலையில் அவனது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

வனவிலங்குகள் கடித்தால் ஏற்படும் பாதிப்புகள் குறித்துப் பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என மருத்துவத் துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

