எம்ஜிஆர், ஜெயலலிதா படங்களை கூட அதிமுக பயன்படுத்தவில்லை.அதனால் விஜய் கட்சியில் இணைந்தேன். தவெகவில் இணைந்த பின் கு.ப.கிருஷ்ணன் விளக்கம்.
சென்னையில் நேற்று நடைபெற்ற தமிழக வெற்றிக்கழகமாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் அக்கட்சித் தலைவர் விஜய் முன்னிலையில் திருச்சி சேர்ந்த அதிமுக முன்னாள் அமைச்சர் கு.ப.கிருஷ்ணன் தவெகவில் இணைந்தார்.
திருச்சி மாவட்டம் குழுமணியைச் சேர்ந்தவர் கு.ப.கிருஷ்ணன் (வயது 75).
முத்தரையர் சமுதாயத்தைச் சேர்ந்த இவர், 1972-ல் எம்ஜிஆர் அதிமுகவை உருவாக்கிய போது, அதிமுகவில் இணைந்தார். எம்ஜிஆர் மறைவுக்குப் பிறகு அதிமுக ஜானகி, ஜெயலலிதா தலைமையில் இரண்டாக பிரிந்த போது ஜெயலலிதா பக்கம் சென்றார். 1991-ல் ஸ்ரீரங்கம் தொகுதியில் போட்டியிட்டு வேளாண்மைத் துறை அமைச்சரானார்.
பின்னர், 2001-ல் தமிழர் பூமி கட்சியை தொடங்கினார். அதன் பிறகு தேமுதிகவில் இணைந்தார். மீண்டும், அதிமுகவில் இணைந்த அவருக்கு ஜெயலலிதா 2011-ல் ஆலங்குடி தொகுதியில் போட்டியிட வாய்ப்புக் கொடுத்தார்.
ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுக சிதறுண்டபோது, ஓபிஎஸ் தலைமையில் அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவில் இருந்தார். கடந்த நாடாளுமன்றத் தேர்தலின் போது, கட்சிப் பணிகளில் இருந்து விலகி இருந்தார்.
இந்நிலையில், சென்னை மாமல்லபுரத்தில் நேற்று நடைபெற்ற தமிழக வெற்றி கழக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் அதன் தலைவர் விஜய் முன்னிலையில் கு.ப.கிருஷ்ணன் அக்கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார்.
இதுகுறித்து கு.ப.கிருஷ்ணன் கூறியிருப்பதாவது:
அதிமுகவை ஒருங்கிணைக்க எவ்வளவோ முயன்றும் அது நடைபெறவில்லை. மதுராந்தகத்தில் நடைபெற்ற தேசிய ஜனநாயக கூட்டணிக் கூட்டத்தில் அதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா படங்களைக் கூட அவர்கள் பயன்படுத்தவில்லை.
அந்தளவுக்கு அதிமுக அடிபணிந்துவிட்டது. தவெக தலைவர் விஜய் எம்ஜிஆர் படங்களை தனது கூட்டங்களில் பயன்படுத்துகிறார். எம்ஜிஆர், ஜெயலலிதா ஆட்சியை தருவேன் என எங்கள் தலைவர்களை உயர்த்தி பிடித்து பேசுகிறார். எங்கள் தலைவர்களை யார் கொண்டாடுகிறார்களோ அவர்களை நாங்கள் கொண்டாடுவோம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

