Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

உடல் உறுப்பு தானத்தில் பெறப்பட்ட 19 வயது வாலிபரின் இதயம் ஹெலிகாப்டரில் சென்னை கொண்டு செல்லப்பட்டது.

0

'- Advertisement -

திருச்சியில் இருந்து உடல் உறுப்பு தானத்தில் பெறப்பட்ட மூளைச்சாவு அடைந்த 19 வயது வாலிபரின் இதயம் சென்னைக்கு ஹெலிகாப்டரில் பறந்து சென்றது.

அங்கிருந்து 2 நிமிடத்தில் ஆம்புலன்ஸ் மூலம் எம்.ஜி.எம் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டது. தஞ்சாவூரை சேர்ந்த 19 வயது வாலிபர் ஒருவர் விபத்தில் மூளைச்சாவு அடைந்தார். இதையடுத்து, அவரது உடல் உறுப்புகளை குடும்பத்தினர் தானமாக வழங்க முன் வந்தனர். கல்லீரல், கருவிழிகள் நெல்லையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கும், தஞ்சை, மதுரை அரசு மருத்துவமனைகளுக்கு தலா ஒரு சிறுநீரகமும் வழங்கப்பட்டது. வாலிபரின் இதயம் சென்னையில் உள்ள எம்ஜிஎம் மருத்துவமனைக்கு கொண்டு சொல்ல முடிவு செய்யப்பட்டது.

இந்த இதயம் கோவாவை சேர்ந்தவரின் உயிரை காக்க எடுத்து சொல்லப்பட்டது.

அந்த வகையில், மருத்துவ அவசரம் மற்றும் ஒருங்கிணந்த முயற்சியின் ஒரு குறிப்பிடத்தக்க நிகழ்வாக அவசர மாற்று அறுவை சிகிச்கைக்காக வாலிபர் இதயம் ஹெலிகாப்டர் மூலம் தஞ்சையில் திருச்சி மற்றும் பல இடங்களை கடந்து நேற்று சென்னைக்கு கொண்டு சொல்லப்பட்டது. உயிர்காக்கும் இதயம் முதலில் தஞ்சாவூர் எம்.ஜி.எம் மருத்துவமனையிலிருந்து திருச்சி எம்.ஜி.எம் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டது. அங்கிருந்து மிக முக்கியமான மருத்துவ நேரமான பொன்னான நேர விதிகளின்படி, தகுந்த நேரத்தில் மருத்துவ சிகிச்சை அளிப்பதை உறுதி செய்வதற்காக திருச்சியிலிருந்து சென்னைக்கு ஹெலிகாப்டர் மூலம் கொண்டு சொல்லப்பட்டது.

மேலும், தானமாகப் பெறப்பட்ட இதயத்தைச் சுமந்து சென்ற ஹெலிகாப்டர் சென்னை அரும்பாக்கத்தில் உள்ள டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி வளாகத்தில் நேற்று பிற்பகல் 3.45 மணியளவில் பாதுகாப்பாக தரையிறங்கியது.

அங்கிருந்து இதயத்தை விரைவாகக் கொண்டு செல்வதற்கு ஏதுவாக கல்லூரி நிர்வாகம் மற்றும் காவல் துறையினரின் ஒருங்கிணைப்புடன் 2 நிமிடத்தில் எடுத்துச்செல்லும் வகையில் ஹெலிகாப்டர் இறங்குதள வசதிகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் சிறப்பாகச் செய்யப்பட்டிருந்தன. இதையடுத்து தரையிறங்கிய இதயம் உடனடியாக மருத்துவக் குழுவிடம் ஒப்படைக்கப்பட்டு, அவசர மாற்று அறுவை சிகிச்சைக்காக அரும்பாக்கம் எம்.ஜி.எம் மருத்துவமனைக்கு பசுமை வழித்தடத்தில் ஆம்புலன்ஸ் மூலம் இரண்டே நிமிடத்தில் கொண்டு செல்லப்பட்டது.

இது இதயச் செயலிழப்பு பாதிப்புக்குள்ளான கோவாவைச் சேர்ந்த 29 வயது நோயாளிக்கு பொருத்தப்படுகிறது.

 

மேலும் டி.ஜி.வைஷ்ணவா கல்லூரியில் ஹெலிகாப்டர் அவசரமாக தரையிறங்குவதற்கான முழு நடவடிக்கைகளும், கல்லூரியின் செயலர் அசோக்குமார் முந்த்ரா, முதல்வர் சந்தோஷ்பாபு மற்றும் எம்.ஜி.எம் மருத்துவமனையின் உறுப்பு மாற்று ஒருங்கிணைப்பு குழுவினரால் வழங்கப்பட்ட கடுமையான மருத்துவ மற்றும் பாதுகாப்பு நெறிமுறைகளின் கீழ், தடையற்ற தொடர் சிகிச்சையை உறுதி செய்யும் வகையில் செய்யப்பட்டன. இந்த சரியான நேர உதவி, நிறுவனத்தின் வலுவான சமூகப் பொறுப்புணர்வையும், மனிதாபிமான பணிகளுக்கான அர்ப்பணிப்பையும் உலகுக்கு உணர்த்தி உள்ளது.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.