எம்.ஜி.ஆரின் திருச்சி பங்களா
திருச்சி வரலாற்று ஆர்வலர் குழு சார்பில் திருச்சி ஓர் பார்வை ஓர் பயணம் நிகழ்வில் எம்ஜிஆர் திருச்சி பங்களா குறித்து அறிந்து கொள்ளத் திருச்சி வரலாற்றுக் குழு ஆர்வலர் நிறுவனத் தலைவர் யோகா ஆசிரியர் விஜயகுமார், சங்க கால நாணயங்கள் சேகரிப்பாளர் முகமது சுபேர், பாலிமர் பணத்தாள்கள் சேகரிப்பாளர் இளம்வழுதி உள்ளிட்டோர் உறையூர் சென்றனர்.
எம்.ஜி.ஆர். திருச்சி பங்களா குறித்துத் திருச்சி வரலாற்று ஆர்வலர் குழு நிறுவனத் தலைவர் யோகா ஆசிரியர் விஜயகுமார் பேசுகையில்,
திருச்சிராப்பள்ளி , உறையூர், சங்க கால சோழர்களின் தலைநகரமாகவும், ‘உறந்தை’, ‘கோழியூர்’ என்றும் அழைக்கப்படும் ஒரு வரலாற்றுப் பெருமை வாய்ந்த நகரமாக இருந்தது.
1983 ஆண்டு எம்.ஜி.ஆர். இரண்டாவது முறையாக முதலமைச்சரான போது, சென்னைக்கு மாற்றுத் தலைநகராக தமிழகத்தின் மையப் பகுதியான திருச்சியை மாற்றத் திட்டமிட்டார். தென் மாவட்ட மக்கள் எளிதாக வந்து செல்லும் வகையில் இந்தத் திட்டம் இருந்தது.
தீரர்களின் கோட்டைத் திருச்சிராப்பள்ளி
திராவிட கட்சிகளின் வரலாற்றில் மிக முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்ட இடம் ஆகும். சென்டிமென்ட் விஷயங்களில் நம்பிக்கையுடைய எம்.ஜி.ஆர், அ.தி.மு.க-வின் இரண்டாவது மாநில மாநாட்டைத் திருச்சியில் நடத்தித் திருப்புமுனையை உண்டாக்கினார். பிறகு தனது ஆட்சியின் நலத்திட்டங்களில் முக்கியமான சத்துணவுத் திட்டத்தையும் திருச்சியிலேயே தொடக்கி வைத்தார்.
திருச்சியை இரண்டாவது தலைநகரமாக மாற்றப்போவதாகவும் அறிவித்தார்.
திருச்சியில் தொடங்கும் செயல்கள் நல்லபடியாக அமையும் என நம்பிய எம்.ஜி.ஆர் திருச்சிக் காவிரிக்கரையோரம் ஒரு வீடு வாங்கி அதில் விரும்புகிற சமயத்தில் வந்து தங்க வேண்டும் என்று விரும்பினார்.
தனது விருப்பத்தை அமைச்சரவையில் அங்கம் வகித்த வீட்டு வசதித் துறை அமைச்சர் திருச்சி நல்லுசாமியிடம் தெரிவிக்கவே, அவர் திருச்சி உறையூர் குடமுருட்டி ஆற்றங்கரை அருகே காவிரிக்கரையில் இருந்து சற்றே உள்ளே உறையூர் செல்லும் சாலையோரம் சுமார் இரண்டு ஏக்கர் பரப்பளவில் தோட்டங்களுக்கு நடுவே பங்களா மாதிரியான வீடு மற்றும் பணியாளர் ஓய்வு இல்லம் ஆகியவற்றுடன் கூடிய ஒரு இடத்தைப்பிடித்து அந்த இடம் பற்றிய விவரங்களை எம்.ஜி.ஆருக்குத் தெரிவித்தார்.
“எனக்கு எது பிடிக்கும் என உனக்குத் தெரியும். உனக்குப் பிடித்திருந்தால் அந்த இடத்தை கிரையம் செய்யலாம்” என எம்.ஜி.ஆர் சொல்லவே உடனே அன்றைய வீட்டு வசதித்துறை அமைச்சர் நல்லுசாமி, திருச்சி சோமரசம்பேட்டையைச் சேர்ந்த பாதிரியார் ஆரோக்கியசாமி என்பவரிடமிருந்து 1984-ல் உறையூரில் 80,000 சதுர அடி பரப்பளவில், சுமார் 4 லட்சம் ரூபாய்க்கு கிரையம் பேசி எம்.ஜி.ஆர் பெயரில் 1984-ம் ஆண்டு மே 8-ம் தேதி திருச்சி உறையூர் சார் பதிவாளர் அலுவலகத்தில் பத்தர பதிவு செய்யப்பட்டது.
அப்போதைய அ.தி.மு.க. அமைச்சரான நல்லுசாமி மற்றும் உறையூரைச் சேர்ந்த வீ.சந்திரன் ஆகியோர் எம்.ஜி.ஆருக்காக வாங்குவதாக கையெழுத்திட்டு கிரையப்பத்திரம் பதிவு செய்தனர்.
அந்த பங்களாவில், தான் விரும்பும் சில மாற்றங்களைச் செய்யச் சொன்னார் எம்.ஜி.ஆர். அதன்படி முதல் மாடி, தரைத்தளம் ஆகியவற்றை எம்.ஜி.ஆர் சொன்ன மாதிரி மாற்றி அமைக்கப்பட்டது. விரைவில் அந்த பங்களாவில் வந்து தங்குவதாகச் சொன்ன எம்.ஜி.ஆருக்கு அக்டோபர் மாதம் உடல்நலம் குன்றியது. பிறகு தனது வாழ்நாளின் இறுதிவரை அந்த இல்லத்துக்கு வரவேயில்லை.
பங்களா வாங்கியபோது நியமிக்கப்பட்ட காவலாளி ஆறுமுகம் இப்போதும் அந்த பங்களாவின் காவலராக இருக்கிறார்.
1987 ஆண்டு எம்.ஜி.ஆர். மறைவுக்குப் பிறகு , அந்த பங்களா பயன்பாட்டில் இல்லாமல் உள்ளது என்றார்.

