அமைச்சர் எல்லாம் எனக்கு ஆளே கிடையாது.தேர்தல் நெருங்கும் நேரத்தில் திமுக பகுதி செயலாளர் குறித்து புலம்பும் உடன்பிறப்புகள்.
முன்னாள் அரசு தலைமை கொறடா ஆர்.மனோகரனுக்கு அனுமதி மறுப்பு.
108 வைணவ திருத்தளங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டம் எனப் போற்றப்படுவதுமான ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயிலில் ஆண்டுதோறும் மார்கழி மாதம் நடைபெறும் வைகுந்த ஏகாதசி பெருவிழா மிகவும் பிரசித்தி பெற்றதாகும். பகல் பத்து, இராப்பத்து என 21 நாட்கள் நடைபெறும் இந்த விழா இந்த ஆண்டு நேற்று முன்தினம் திருநெடுந்தாண்டகத்துடன் தொடங்கியது.
திருமொழித்திருநாள் எனப்படும் பகல் பத்து உற்சவம் தற்போது நடந்து வருகின்றது. இதனை முன்னிட்டு திருச்சி மட்டுமல்லாது பிறமாநிலங்களில் இருந்தும், பல நாடுகளில் இருந்தும் தினம் தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயிலுக்கு வந்து அரங்கனை தரிசித்து வருகின்றனர். இந்த விழாக்காலங்களில் உள்ளூர் முக்கிய பிரமுகர்கள், அரசு அதிகாரிகளுக்கு கோயிலில் ரெங்கநாதரை தரிசிக்க சிறப்பு அனுமதி கொடுக்கப்பட்டு வருவது வழக்கமாக இருக்கும் நிலையில் தற்போது கோயிலில் பெரும் கெடுபிடிகளால் உள்ளூர் பிரமுகர்கள் மட்டுமல்லாது பக்தர்களும் பெரும் அவதிக்குள்ளாகியிருக்கின்றனர்.
பத்திரிகையாளர்களுக்கும் பெரும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளது.
பகல்பத்து உற்சவத்திற்காக உற்சவர் ரெங்கநாதர் மூலஸ்தானத்திலிருந்து புறப்பாடாகி அர்ஜூன மண்டபத்தில் எழுந்தருள்வார். அந்தவகையில், பகல் பத்து திருநாளின் முதல் நாள் அன்று திருச்சியை பூர்விகமாக கொண்ட தமிழ்நாடு அரசின் முன்னாள் தலைமை கொறடாவும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான ஆர்.மனோகரன் ஸ்ரீரங்கம் ரெங்கநாதரை தரிசிக்க கோயிலுக்கு வந்திருந்தார். அவருக்கு வாசல் திறக்கப்படாமல் நீண்ட நேரம் ரெங்கநாதரை வழிபாடு செய்ய அனுமதி மறுக்கப்பட்டது. பெரும் பேச்சு வார்த்தைக்கு பின் நீண்ட நேரம் காத்திருந்த அவருக்கு காலதாமதமாகத் தான் கதவு திறக்கப்பட்டு ரெங்கனை வழிபட அனுமதிக்கப்பட்டார். இதனால் அவர் கூனிக்குறுகி நின்ற சம்பவத்தை நேரில் பார்த்த பொதுமக்களுக்கும், முக்கிய பிரமுகர்களுக்கும் பெருத்த அனுதாபத்தை அவர்மேல் உருவாக்கியது.

அதேபோல், நேற்று திருச்சி மாநகராட்சி துணை மேயர் திவ்யாவின் கணவர் தனக்கோடி ஸ்ரீரங்கம் ரெங்கநாதரை வழிபாடு செய்ய கோயிலுக்கு சென்று இருந்தார். அவரையும் கோயில் ஊழியர்கள் ராம்குமார் பேச்சைக் கேட்டு உதாசீனப்படுத்தினர்.
அதேநேரம் நான் தான் ஸ்ரீரங்கம் மண்டல தலைவர் எனக் கூறி கொள்ளும் (இவரது மனைவி ஆண்டாள் தான் மன்டல் தலைவர்) ராம்குமார் மற்றும் அவருக்கு வேண்டியப்பட்டவர்கள் மட்டுமே மூலஸ்தான மண்டபத்திற்கு எளிதில் (கோவிலின் அனைத்து பகுதிக்கும்) செல்லும் நிலை உள்ளது. (தற்போது தனது மகனையும் அடியாள் போல் அனைத்து இடத்திற்கும் அழைத்துச் செல்வது தனிக்கதை)
ஸ்ரீரங்கத்தைப் பொறுத்தவரை தற்போது ஸ்ரீரங்கம் திமுக பகுதி செயலாளர் ராம்குமார் தான் முழு ஆளுமை செலுத்தி வருகின்றார். அமைச்சர் சேகர்பாபுவின் ஆதரவாளராக செயல்பட்டுக்கொண்டிருக்கும் ராம்குமார், திருச்சி அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி இருவரையுமே உதாசீனப்படுத்தி அவ்வப்போது திமுக உள்ளூர் பிரமுகர்களின் கோபத்தைப் பெற்றவர். (6 வது வார்டு கவுன்சிலர் கலைமணியின் மகன் வட்ட செயலாளர் ஜனா என்னும் ஜனார்த்தனிடம் அறிவாலயத்தில் அமைச்சர் கே.என். நேரு முன்பு அடி வாங்கியவர்) ஸ்ரீரங்கம் கோயிலில் ராம்குமாரின் முழுஆளுமை செலுத்தும் நிலை தொடர்வதால் ஆளும்கட்சியை சார்ந்த உடன்பிறப்புகளே ராம்குமாருக்கு எதிராக குரல் கொடுத்து வருகின்றனர்.
சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் நேரத்தில் பொதுமக்கள் மற்றும் பக்தர்களிடம் இதுபோன்று எதிர்ப்பை சம்பாதிப்பது ஆளும் கட்சிக்கு நல்லது அல்ல , இதன் எதிர்ப்பு தேர்தல் நேரத்தில் எதிரொலிக்கும் என ஸ்ரீரங்கம் வாசிகள் கூறி வருகின்றனர்.

