கம்பீர் தலையிடாததால் தான் தகுதியானவர்களுக்கு வாய்ப்பு.டி20 உலக கோப்பை இந்திய அணித்தேர்வு சூப்பர். முன்னாள் வீரர்கள் பாராட்டு.
இந்திய கிரிக்கெட் ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட டி20 உலக க்கோப்பைக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. 15 பேர் கொண்ட இந்த அணியில் சஞ்சு சாம்சன் சேர்க்கப்பட்டுள்ளார்.
இதுவரை இந்திய டி20 அணிக்கு துணைக் கேப்டனாக இருந்த சுப்மன் கில் தேர்வு செய்யப்படவில்லை. அவருக்கு பதிலாக அக்சர் படேல் இந்திய அணியின் டி20 துணைக் கேப்டனாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதைவிட, ஒரு சர்ப்பிரைஸ் என்னவென்றால், ரிங்குசிங்குடன், சையது முஸ்டாக் அலி தொடரில் சிறப்பாக ஆடிய இன்னொரு பிளேயர் இந்திய அணியின் இந்த ஸ்குவாடில் இடம்பிடித்து ஆச்சரியப்படுத்தியுள்ளார்.
இந்தியா மற்றும் இலங்கை இணைந்து அடுத்தாண்டு டி20 உலகக்கோப்பை தொடரை நடத்துகின்றன. பிப்ரவரி 7 ஆம் தேதி தொடங்கும் இப்போட்டி, மார்ச் 8 ஆம் தேதி வரை நடக்க உள்ளது. இப்போட்டிக்கான இந்திய அணி தேர்வு மும்பையில் நேற்று நடைபெற்றது. அணியில் யாரெல்லாம் இடம்பெறுவார்கள்? என எதிர்பார்ப்பு மேலோங்கியிருந்த நிலையில், பிசிசிஐ 15 பேர் கொண்ட அணி பட்டியலை இன்று அதிகாரப்பூர்மாக அறிவித்தது. கேப்டனாக சூர்யகுமார் யாதவ், துணைக் கேப்டனாக அக்சர் படேல் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
தற்போது அறிவிக்கப்பட்டுள்ள டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி:

சூர்யா குமார் (கேப்டன்), ஜஸ்பிரித் பும்ரா, அபிஷேக், ஹர்ஷித், சஞ்சு சாம்சன், அர்ஷ்தீப், திலக், குல்தீப், ஹர்திக், வருண் சக்கரவர்த்தி, ஷிவம் துபே, வாஷிங்டன் சுந்தர், அக்சர், இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), ரிங்கு சிங்.
இதில் ரிங்கு சிங், இஷான் கிஷன் ஆகியோர் சர்பிரைஸாக அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். இருவருமே தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான டி20 தொடரில் விளையாடவில்லை. ஆனால், சையது முஷ்டாக் அலி தொடரில் சிறப்பாக ஆடினர். குறிப்பாக இஷான் கிஷன் இந்த தொடரில் அபாரமாக விளையாடியதுடன், அவரது தலைமையிலான ஜார்க்கண்ட் அணி சாம்பியன் பட்டத்தையும் கைப்பற்றியது. அதன் தொடர்ச்சியாக இஷான் கிஷனுக்கு டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் இடம் கிடைத்துள்ளது.
அதேநேரத்தில் தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான டி20 தொடரில் மிக மோசமாக விளையாடிய சுப்மன் கில் அதிரடியாக டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் தேர்வு செய்யப்படவில்லை. அவருக்கு பதிலாகவே, சஞ்சு சாம்சனை தேர்வு செய்துள்ள பிசிசிஐ, அபிஷேக் சர்மாவுடன் ஓப்பனிங் விளையாட உள்ள காம்பினேஷனையும் உறுதி செய்துள்ளது.
இந்த அணியை அஜித் அகர்கர் தலைமையிலான தேர்வுக்குழு மற்றும் கேப்டன் சூர்யகுமார் யாதவ் ஆகியோர் தேர்வு செய்தனர். அதாவது, ஆர்பி சிங், பிரக்யான் ஓஜா உள்ளிட்டோர் அணித் தேர்வில் இடம்பெற்றிருந்தனர்.
கௌதம் கம்பீர் பயிற்சியாளராகப் பொறுப்பேற்றதிலிருந்து, அணித் தேர்வில் அவரது தலையீடு அதிகமாக இருந்ததாக ஒரு பேச்சு அடிபட்டது. டி20-யை தவிர்த்து ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் இந்தியா சந்தித்த தோல்விகள், குறிப்பாக சொந்த மண்ணில் டெஸ்ட் தொடரை இழந்தது ரசிகர்களை கடுப்படைய வைத்திருந்தது.

இதன் உச்சக்கட்டமாக, சமீபத்திய தென்னாப்பிரிக்க டி20 தொடரில் எடுக்கப்பட்ட முடிவுகள் யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாதவையாக இருந்தன. தொடர்ச்சியாக 3 சதங்கள் அடித்த சஞ்சு சாம்சனை ஓரம் கட்டிவிட்டு, ஃபார்மில் இல்லாத சுப்மன் கில்லை ஓப்பனிங் இறக்கியது, கில்லுக்கு துணை கேப்டன் பதவி கொடுத்தது, சம்பந்தமே இல்லாமல் ஜித்தேஷ் சர்மாவை விக்கெட் கீப்பராக சேர்த்தது, சிறப்பாக ஆடிக்கொண்டிருந்த ரிங்கு சிங்கை நீக்கியது என இந்த குளறுபடிகள் காரணமாக இந்திய அணி இரண்டாவது டி20 போட்டியில் படுதோல்வியைச் சந்தித்தது.
“இனி இவரை நம்பினால் வேலைக்கு ஆகாது” என நினைத்ததோ என்னவோ, உலகக்கோப்பைக்கான அணித் தேர்வுக் கூட்டத்தில் பயிற்சியாளர் கௌதம் கம்பீருக்கு பிசிசிஐ அழைப்பு விடுக்கவில்லை என்று தெரிகிறது. வழக்கத்திற்கு மாறாக, தேர்வுக் குழுத் தலைவர் அஜித் அகர்கர், கேப்டன் சூர்யகுமார் யாதவ் ஆகியோருடன் பிசிசிஐ செயலாளர் தேவ்ஜித் சைக்கியா கூட்டத்தில் பங்கேற்று அணியை இறுதி செய்துள்ளனர்.
இதனால் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர் நேரடியாக கலந்து கொள்ளவில்லை. அவர் வீடியோ கான்பரன்சிங் மூலம் ஆன்லைனில் கலந்து கொண்டார் என கூறப்படுகிறது. இருப்பினும், இந்த அணித் தேர்வில் கம்பீருக்கு கொஞ்சம் சங்கடம் உள்ளதாக தெரிகிறது. சுப்மன் கில்லை சேர்க்க வேண்டும் என அவர் வலியுறுத்திய நிலையில், தேர்வுக்குழு அதனை நிராகரித்ததாக கூறப்படுகிறது. அதேநேரத்தில், பிசிசிஐ அறிவித்துள்ள டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி, சிறப்பானது என முன்னாள் வீரர்கள் பலரும் பாராட்டியுள்ளனர்.
இந்த அணி அறிவிப்பைப் பார்த்த ரசிகர்கள், “கம்பீர் தலையிடாததால் தான் தகுதியானவர்களுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது” என்று வெளிப்படையாகவே கூறி வருகின்றனர். “காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை எல்லோரும் கேட்ட கேள்விக்கு பிசிசிஐ சரியான பதில் அளித்துள்ளது. உலகக்கோப்பையை வெல்லப்போவது இந்த அணி தான்” என ரசிகர்கள் நம்பிக்கையுடன் பதிவிட்டு வருகின்றனர்.
இதே அணியே ஜனவரியில் நியூசிலாந்து அணிக்கு எதிரான டி20 போட்டி தொடரிலும் விளையாடும் என பிசிசிஐ அறிவித்துள்ளது.

