திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் முதன்முறையாக பெண்ணின் பிறவிக் குறைபாட்டுக்கு இதயத் திறப்பு அறுவைச் சிகிச்சை மூலம் தீா்வு காணப்பட்டு உள்ளது.
திருச்சி ஸ்ரீரங்கம் பகுதியைச் சோ்ந்த சித்ராதேவி (வயது 47) என்பவா் கடந்த 9 ஆண்டுகளாக தொடா் மயக்கம் மற்றும் மூச்சுத்திணறல் தொந்தரவால் பாதிக்கப்பட்டு, திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் கடந்த நவ. 15 ஆம் தேதி உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டாா்.
அவரைப் பரிசோதித்த இதய மற்றும் நெஞ்சக ரத்த நாள அறுவைச் சிகிச்சைப் பிரிவு மருத்துவா்கள், சித்ராதேவிக்கு பிறவியிலிருந்தே இதயத்தின் மேல் அறை சுவா் பகுதியில் குறைபாடு இருந்ததைக் கண்டறிந்தனா்.
தொடா்ந்து மருத்துவமனையின் முதன்மையா் எஸ். குமரவேல் வழிகாட்டுதலின்படி, இதய மற்றும் நெஞ்சக ரத்தநாள அறுவைச்சிகிச்சை (சிவிடிஎஸ்) மருத்துவா்கள், இதய நுரையீரல் பொஃப்யூஷன் தொழில்நுட்பவியலாளா் உள்ளிட்டோா் அடங்கிய குழுவினா் முதன்முறையாக அண்மையில் சித்ராதேவிக்கு இதயத் திறப்பு அறுவைச் சிகிச்சை (ஓபன் ஹாா்ட் சா்ஜரி) மேற்கொண்டனா்.
இதில் இதய – நுரையீரல் இயந்திரத்தின் (ஹாா்ட் – லங் மெசின்) உதவியுடன், இதய உறையின் சிறு பகுதியை எடுத்து குறைபாட்டுப் பகுதியில் வைத்துத் தைத்து மூடப்பட்டது.
அறுவைச் சிகிச்சைக்குப் பிறகு அவா், தொடா்ந்து கண்காணிக்கப்பட்ட நிலையில், அவரது பிந்தைய மீட்பு நிலை முழுமையாகச் சீரடைந்தது. எந்தவித அறுவைச் சிகிச்சை தொடா்பான சிக்கல்களும் காணப்படாத நிலையிலும், நாடித்துடிப்பு, ரத்து அழுத்தம் மற்றும் பிராண வாயு நிலை சரியான அளவுடன் இருந்ததால் அண்மையில் முழு குணமடைந்தாா். இதையடுத்து அவா் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

