திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்ற முற்பட்ட பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் எச்..ராஜா மற்றும் இந்து அமைப்பினர் கைதால் பரபரப்பு.
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத் தூணில் இன்றே தீபம் ஏற்ற வேண்டும் என நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவிட்ட நிலையில், தீபம் ஏற்ற முற்பட்ட பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் எச்..ராஜா மற்றும் இந்து அமைப்பினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத் தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற தனி நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அளித்த உத்தரவு தொடர்பான தமிழக அரசின் மேல்முறையீட்டு மனுவை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை இன்று தள்ளுபடி செய்தது.
திருப்பரங்குன்றம் தீப விவகாரத்தில் தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்ய மறுத்த நீதிபதிகள், இந்த வழக்கை மீண்டும் ஜி.ஆர்.சுவாமிநாதனே விசாரிப்பார் எனவும் உத்தரவிட்டது.
இதனையடுத்து, இந்த வழக்கை இன்று மாலை விசாரித்த தனி நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், திருப்பரங்குன்றத்தில் அமலில் இருந்த 144 தடை உத்தரவை ரத்து செய்தார். மேலும், “இன்று மாலையே திருப்பரங்குன்றத்தில் உள்ள தீபத் தூணில் தீபம் ஏற்ற வேண்டும். மனுதாரர் 10 பேருடன் சென்று தீபமேற்ற பாதுகாப்பு அளிக்க வேண்டும். தீபம் ஏற்றி நாளை காலை 10.30 மணிக்குள் அறிக்கை அளிக்க வேண்டும். காவல் துறை பாதுகாப்பு தராவிடில் கடும் உத்தரவு பிறப்பிக்கப்படும். நாளை காலை 10 மணிக்கு காவல் ஆணையர் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும்” என உத்தரவிட்டார்.
இந்த உத்தரவைத் தொடர்ந்து திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபமேற்ற பாஜகவினர் மற்றும் இந்து அமைப்பினர் தீவிரம் காட்டினர். ஆனால், மேல்முறையீடு செய்யவுள்ளதால் தீபம் ஏற்ற அனுமதிக்க முடியாது என காவல் துறை தெரிவித்தது. இதனால் பாஜகவினர் மற்றும் இந்து அமைப்புகள் திருப்பரங்குன்றத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் மற்றும் மனுதாரர் ராம. ரவிக்குமார் ஆகியோர் தீபத் தூணில் தீபமேற்ற அனுமதிக்க வேண்டும் என போலீஸாருடன் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால், போலீஸார் தொடர்ந்து மறுத்ததால் போராட்டம் தீவிரமடைந்தது.
இதனையடுத்து தீபத் தூணில் தீபம் ஏற்ற முயன்ற பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், எச்.ராஜா இந்து அமைப்பினர் மற்றும் பாஜகவினர் கைது செய்யப்பட்டு காவல் துறை வாகனங்களில் அழைத்துச் செல்லப்பட்டனர். மேலும், அங்கே கூடுபவர்களும் தொடர்ந்து கைது செய்யப்பட்டு வருகின்றனர். இதன் காரணமாக திருப்பரங்குன்றத்தில் தொடர்ந்து பதற்றமான சூழல் நிலவி வருகிறது.
முன்னதாக செய்தியாளர்களிடம் நயினார் நாகேந்திரன் கூறும்போது, “திருப்பரங்குன்றம் மலை உச்சியிலுள்ள தீபத் தூணில் கார்த்திகை தீபம் ஏற்றுவதில் கிடைத்த வெற்றி என்பது ஒட்டுமொத்த தமிழகத்துக்கு கிடைத்த வெற்றி. திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தீபத் தூணில் தீபம் ஏற்றும் விவகாரத்தில் தமிழக அரசு தேவையின்றி தலையிடுகிறது.
தமிழக அரசு மேல்முறையீடு செல்வது பற்றி ஆட்சேபம் இல்லை. தற்போது நீதிமன்றம் என்ன சொல்கிறது… தீர்ப்பை தமிழக காவல் துறை மதிக்கிறதா, இல்லையா என்ற கேள்வி எழுகிறது. நீதிபதியின் தீர்ப்பை நிறைவேற்ற அரசு, காவல் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுதான் நியாயம். நீதிபதியால் உத்தரவு மட்டுமே போட முடியும். அவரே எல்லாம் போய் செய்ய முடியாது. போலீஸ் கைது செய்யதால் கூட போகவேண்டியதுதான். போலீஸாரை அடிக்க முடியுமா?!” என்றார்.

