Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

லெஸ்பியன் உறவுக்கு இடைஞ்சல்… 5 மாத குழந்தையை கொடூரமாக கொன்ற தாய் .

0

'- Advertisement -

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அடுத்த கெலமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சின்னட்டி கிராமத்தை சேர்ந்தவர் சுரேஷ் (வயது 30).

 

இவர் பெயிண்டர் வேலை செய்து வருகிறார். இவருக்கு பாரதி என்ற மனைவியும், 2 பெண் குழந்தைகளும் ஒரு ஆண் குழந்தையும் உள்ளது. இந்த தம்பதிக்கு சமீபத்தில்தான் அந்த ஆண் குழந்தை பிறந்திருந்தது. தங்களுக்கு ஆண் வாரிசு பிறந்ததை அந்த தம்பதி கொண்டாடி தீர்த்ததாக கூறுகின்றனர்.

 

 

இதனிடையே சுரேஷின் மனைவி பாரதி, எதிர்வீட்டை சேர்ந்த சுமித்ரா ஆகியோர் தன்பாலின ஈர்ப்பாளர்கள் (லெஸ்பியன் ) ஆவர். இவர்கள் திருமணத்தை தாண்டிய உறவில் இருந்ததாக கூறப்படுகிறது. பாரதி காதலியின் பெயரை மார்பில் SUMI என டாட்டூ குத்தும் அளவிற்கு இருவரும் காதலித்துள்ளனர் என்று தகவல்கள் கூறுகின்றன. ஒரு கட்டத்தில், பாரதி – சுமித்ரா இடையேயான இந்த உறவு, கணவர் சுரேஷிற்கும் தெரியவந்துள்ளதாக கூறப்படுகிறது.

இதையடுத்து அவர் தனது மனைவி பாரதியை எச்சரித்துள்ளார். சுமித்ராவையும் கூட அவர் எச்சரித்ததாக கூறப்படுகிறது. இருப்பினும், அவர்கள் தங்களிடையேயான பழக்கத்தை நிறுத்திக்கொள்ளவில்லை. இதனால் கணவன் – மனைவிக்கும் அவ்வபோது தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

 

இந்தநிலையில் நவ. 4 ம் தேதி அன்று சுரேஷ் மதியம் வீட்டிற்கு சென்றபோது, குழந்தை மூச்சு பேச்சில்லாமல் இருப்பதை பார்த்துள்ளார். இதுகுறித்து மனைவி பாரதியிடம் கேட்டபோது குழந்தையை புட்டி பால் கொடுத்து தூங்க வைத்ததாகவும், குழந்தைக்கு புரையேறி இரும்பல் வந்ததாகவும் கூறி உள்ளார். சுரேஷ் பதறியடித்துக்கொண்டு கெலமங்கலத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றுள்ளார். அங்கு குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கெனவே குழந்தை இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.

 

பின்னர் பிரேத பரிசோதனைக்கு மருத்துவர்கள் பரிந்துரைத்த நிலையில் அதனை வேண்டாம் என மறுத்த சுரேஷ் தனது மகனின் உடலை வீட்டிற்கு எடுத்துச் சென்று நல்லடக்கம் செய்துள்ளார்.

 

இதனிடையே தான் மனைவியின் செல்போனில் சுரேஷ்க்கு அதிர்ச்சி காத்திருந்தது. அவர் தனது மனைவி சுமித்ராவுடன் பேசும் ஒரு உரையாடலை கேட்டுள்ளார். அதில் இருவரும் அடிக்கடி உல்லாசமாக இருந்து வந்தபோது குழந்தை அழுது,தொந்தரவு செய்ததை இருவரும் விரும்பவில்லை.

 

இதனால், சுமித்ரா நாம் தனிமையில் இருக்க இடையூறாக உள்ள அந்த குழந்தையை கொன்றுவிடு எனக்கூறி வாட்ஸ்ஆப்பில் வாய்ஸ் மெசேஜ் அனுப்பியதாகவும், பாரதியும் வாயை பொத்தி குழந்தையை ஈவு இரக்கமின்றி கொலை செய்து கொன்றுவிட்டதாக வாட்ஸ் ஆப்பில் பதிலளித்தது மட்டுமில்லாமல் குழந்தை இறந்த புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார்.

 

குழந்தையை கொன்ற தகவல் கணவனுக்கு தெரியவந்ததும் மனைவி தலைமறைவாகி உள்ளார்.

 

மகனை கொன்ற மனைவி மீது கெலமங்கலம் காவல்நிலையத்தில் புகாரளிக்க போவதாக சுரேஷ் அக்கம் பக்கத்தில் தகவல் தெரிவித்துள்ளார். இதை அறிந்த பாரதி கணவருக்கு போன் செய்து, ‘புகார் அளிக்க வேண்டாம் தவறு நடந்துவிட்டது, நீ என்ன செய்தாலும் ஏற்றுக்கொள்கிறேன்’ எனக்கூறியிருக்கிறார். உடனே கணவரோ என்ன நடந்தது எனக் கேட்க மனைவி தயங்கி தயங்கி மகனை கொன்றதை ஒப்புக்கொண்டிருக்கிறார்.

 

இதனால், மனைமுடைந்து போன சுரேஷ் காவல்நிலையத்தில் அளித்த புகாரின் பாரதி – சுமித்ராவை போலீசார் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். ஆண் குழந்தை புதைக்கப்பட்ட இடத்தில் தோண்டி எடுத்து உடற்கூறாய்வு செய்யப்படும் என்றும் காவல்துறையினர் தெரிவித்தனர்

தங்களின் உல்லாச உறவுக்கு தடையாக இருந்த ஐந்து மாத ஆண் குழந்தையை, காதலி சொல் பேச்சு கேட்டு, பெற்ற தாயே கொடூரமாக கொலை செய்த சம்பவம் அப்பகுதியினரை அதிர்ச்சிக்குள்ளக்கி உள்ளது.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.