மருமகன் தன் மகளின்.சடலத்தைப் பார்க்கக்கூட வரவில்லை , ஆனால் இன்று ரூ.20 லட்சத்தை வாங்கிச் சென்றது நியாயமா ? என் பேத்தியின் எதிர்காலம் என்னாவது … பாட்டி கண்ணீர் மனு .
செப்டம்பர் மாதம் 27-ஆம் தேதி கரூரில், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் கலந்துகொண்ட பிரச்சாரக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தது நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்தச் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்குத் தலா ரூ. 20 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூ. 2 லட்சமும் நிவாரண உதவி வழங்கப்படும் என்று விஜய் அறிவித்தார். அதன்படி, உயிரிழந்தவர்களின் குடும்பத்தின் வங்கிக் கணக்குகளுக்கு ரூ. 20 லட்சம் பணம் அனுப்பி வைக்கப்பட்டது.

இந்த நிவாரணப் பணம் கிடைத்த பிறகு, அதில் ஒரு துயரச் சம்பவம் குறித்த புதிய சர்ச்சை எழுந்துள்ளது. நெரிசலில் பலியான ஒரு பெண்ணின் தாயார் இப்போது தன் மருமகன் மீது புகார் அளித்துள்ளார். அந்தப் பெண் இறப்பதற்கு ஒரு வருடத்துக்கு முன்பே, கணவருடன் ஏற்பட்ட பிரச்சனையால் அவரை விட்டுப் பிரிந்து தனது வீட்டிற்கு வந்துவிட்டார் என்றும், அவர்களுக்கு இரண்டரை வயதில் ஒரு பெண் குழந்தை இருப்பதாகவும் அந்தத் தாய் தெரிவித்தார்.
விஜய் கூட்டத்தில் மகள் உயிரிழந்தபோது, அவருடைய மருமகன் தன் மகளின்.சடலத்தைப் பார்க்கக்கூட வரவில்லை என்றும், ஆனால் இழப்பீடு அறிவிக்கப்பட்டவுடன் மருத்துவமனைக்கு வந்து சண்டையிட்டுச் சடலத்தை வாங்கி அடக்கம் செய்ததோடு, குழந்தையையும் தன்னோடு அழைத்துச் சென்றுவிட்டதாகவும் மாமியார் குற்றம் சாட்டியுள்ளார்.
இப்போது ரூ. 20 லட்சம் நிவாரணப் பணம் கிடைத்த பிறகு, அந்த மருமகன் வேறு விதமாக நடந்துகொள்வதாகவும், அந்தப் பணத்தைத் தன் விருப்பப்படிதான் செலவு செய்வேன் என்று திமிராகப் பேசுவதாகவும் அவர் கண்ணீருடன் தெரிவித்தார்.
எனவே, அந்த மாமியார், “என் மகளின் இறப்பிற்குக் கிடைத்த இந்த நிவாரணத் தொகையை என் பேத்தியின் பெயரில் வங்கியில் நிரந்தரமாக டெபாசிட் செய்ய வேண்டும். மேலும், தன் பேத்தியின் எதிர்காலத்தைப் பாதுகாக்க, அந்த டெபாசிட்டுக்குத் தன்னையும், மருமகனையும் நாமினியாக நியமிக்க வேண்டும்” என்று கோரிக்கை வைத்துள்ளார். பணத்தை வீணாக்குவதைத் தடுக்கவும், பேத்தியின் எதிர்காலத்தைப் பாதுகாக்கவும் அவர் இந்த மனுவை அளித்துள்ளார்.

