அடிக்க அடிக்க பந்து மாதிரி எழுந்திருக்க வேண்டுமே தவிர விட்டுவிட்டு போகக் கூடாது’ அமைச்சர் கே.என்.நேரு .
திமுகவில் இருப்பவர்களை குறிவைத்து அடிப்பதற்கு பாஜக தயாராகிவிட்டதாகவும், அதற்கு தான் முதல் பலி ஆகிவிட்டதாகவும் அமைச்சர் கே.என்.நேரு பேசியுள்ளார்.

திருவாரூர் மாவட்ட திமுக சார்பில், ‘என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி’ என்ற தலைப்பிலான பாக நிலை முகவர்கள் மற்றும் பிடிஏ முகவர்களுக்கான மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம், திருவாரூர் மாவட்ட திமுக செயலாளர் பூண்டி கலைவாணன் எம்எல்ஏ தலைமையில் நடைபெற்றது.
இதில், கழக முதன்மைச் செயலாளரும், திருச்சி மண்டல பொறுப்பாளரும், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கேஎன் நேரு சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு வாக்குச்சாவடி பாக நிலை முகவர்கள் மற்றும் டிஜிட்டல் முகவர்களுக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்.
இக்கூட்டத்தில் அமைச்சர் கே.என்.நேரு, பேசியபோது கூறியதாவது :-
‘வாக்காளர் பட்டியலை சரியாக செய்தோம் என்றால் நமக்கு பாதி வெற்றி உறுதி செய்யப்பட்டது. திமுக கூட்டணியில் இருப்பவர்கள் வெளியே சென்று விடுவார்கள் என அதிமுக பழனிசாமி கூறினார். ஆனால், நமது கூட்டணியில் இருந்து இதுவரை யாரும் வெளியே செல்லவில்லை.
ஆனால் அவருடன் இருப்பவர்களில் பாமக இரண்டாக பிரிந்து விட்டது. தேமுதிக வெளியேறிவிட்டது. சசிகலா, டிடிவி, ஓபிஎஸ், செங்கோட்டையன் எனப் பல பிரிவுகளாக பிரிந்திருக்கிறார்கள். அதிமுக தான் செதில், செதிலாக பிரிந்திருக்கிறார்கள். நாம் அப்படியே தான் ஒற்றுமையாக இருக்கிறோம்.
ஸ்டாலினை மீண்டும் இரண்டாவது முறையாக முதல்வராக உருவாக்கி, ஆட்சி கட்டிலில் அமர வைப்பது தான் நமது கடமை.
இரண்டாவது முறையாக தமிழக முதல்வராக ஸ்டாலினை பதவி ஏற்க வைப்பது அவருக்காக அல்ல,பொதுமக்களின் நன்மைக்காக.
திமுகவில் இருக்கும் ஒவ்வொருவரையும் குறிவைத்து அடிப்பதற்கு பாஜக தயாராகிவிட்டது. அதற்கு முதல் பலி நானாகி விட்டேன். எது வந்தாலும் நிற்போம் அதில் எந்த வித மாற்றமும் இல்லை. அடிக்க அடிக்க பந்து மாதிரி எழுந்திருக்க வேண்டுமே தவிர விட்டுவிட்டு போகக் கூடாது’ என்று பேசி உள்ளார்.

