Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

நான், சசிகலா ஆகியோர் கட்சியிலிருந்தால் எடப்பாடி பழனிச்சாமியின் பதவிக்கு ஆபத்து என்பதால் எங்களை கட்சியிலிருந்து நீக்கியவர் ஈபிஎஸ், திருச்சியில் டிடிவி தினகரன் பேட்டி .

0

'- Advertisement -

அ.ம.மு.க பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கெடுப்பதற்காக நேற்று ஞாயிற்றுக்கிழமை திருச்சி வந்தார்.

 

திருச்சி கலெக்டர் ஆபீஸ் ரோட்டில் உள்ள பிரபல ஹோட்டலில் தங்கியிருந்த அவர் நேற்று (02.11.2025) மாலை செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

 

‘எஸ்.ஐ.ஆர் குறித்து அனைத்து கட்சி கூட்டத்தை அரசு நடத்தியிருந்தால் கலந்து கொள்வோம். தி.மு.க நடத்தியதால் கலந்து கொள்ளவில்லை. பீகாரில் நடந்த எஸ்..ஐ.ஆரில் பல்வேறு குளறுபடிகள் நடந்துள்ளதாக தெரிவித்தனர். பீகாரில் பா.ஜ.க கூட்டணி ஆட்சி உள்ளது. அதனால், அங்கு குளறுபடிகள் நடந்திருக்கலாம், ஆனால் தமிழ்நாட்டில தி.மு.க ஆட்சி நடந்து வருகிறது. தமிழ்நாட்டு அதிகாரிகள் தான் கணக்கெடுக்க போகிறார்கள். அதை நேர்மறையாக பார்க்கலாம் பயத்தில் பார்க்க தேவையில்லை.

 

தி.மு.க ஆட்சியில் எந்த தவறும் செய்திட முடியாது. தமிழ்நாட்டில எல்லா கட்சிகளும் விழிப்புடன் இருப்பார்கள். கொடநாடு விவகாரத்தில் எடப்பாடி பழனிச்சாமி ஏ1 என்றால் அவரைக் கைது செய்யலாம் என திண்டுக்கல் சீனிவாசன் அவருடைய ஆசையை வெளிப்படுத்தி உள்ளார்.

 

ஆர்.கே.நகர் தேர்தலில் அ.தி.மு.க-வை காக்க வந்தவர் டி.டி.வி என பேசிவிட்டு, ஏப்ரல் மாதத்தில் என்னை நீக்கியவர் எடப்பாடி பழனிசாமி. என்னை நீக்குவதற்கு மூன்று நாட்களுக்கு முன்பு நாங்கள் இணைந்து சென்று அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்தோம், அடுத்த மூன்று நாட்களில் என்னை கட்சியிலிருந்து நீக்கினார். மூன்று நாட்களில் நான் என்ன துரோகம் செய்திருப்பேன்.

 

எடப்பாடி பழனிச்சாமியை முதல்வராக ஏற்க மனமின்றி பலர் தப்பிக்க பார்த்தார்கள், அவர்களை அழைத்து வந்தது நான் தான். நான், சசிகலா ஆகியோர் கட்சியிலிருந்தால் எடப்பாடி பழனிச்சாமியின் பதவிக்கு ஆபத்து என்பதால் எங்களை கட்சியிலிருந்து நீக்கினார். முதல்வராக்கிய சசிகலாவிற்கே துரோகம் செய்த எடப்பாடி பழனிச்சாமி, ஒருவேளை அ.தி.மு.க – த.வெ.க கூட்டணி அமைத்து தேர்தலில் வெற்றி பெற்றால் விஜையையும் காலி செய்து விடுவார்.

 

2021 தேர்தலின் போது தற்போதைய முதல்வர் தான் பழனிச்சாமி ஆட்சியில் ஊழல் பெருக்கடுத்து ஓடுகிறது என கூறினார். கொடநாடு விவகாரம் குறித்து நடவடிக்கை எடுப்போம் என்றார் ஆனால் பழனிச்சாமி மீது இதுவரை எந்த வித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை.

 

எடப்பாடி பழனிச்சாமி அ.தி.மு.க பொதுச்செயலாளராக இருப்பது தான் எங்களுக்கு நல்லது என துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேசி உள்ளார். இதிலிருந்து தி.மு.க-வின் ‘பி’ டீமாக செயல்படுபவர் எடப்பாடி பழனிச்சாமி தான் என்பது தெரிகிறது.

 

செங்கோட்டையனை நீக்குவதற்கு எடப்பாடி பழனிச்சாமி தகுதியற்றவர். துரோகத்திற்கு எதிராக உருவாக்கப்பட்ட அ.தி.மு.க என்கிற இயக்கம் இன்று துரோகி கையில் சிக்கி உள்ளது. அதை அக்கட்சி தொண்டர்கள் உணரவில்லை என்றால் ஆண்டவனாலும் அ.தி.மு.க-வைக் காப்பாற்ற முடியாது. அ.தி.மு.க-வைக் காப்பாற்ற வேண்டிய பொறுப்பு அ.ம.மு.க-விற்கு இருக்கிறது. இ.டி.எம்.கே எடப்பாடி முன்னேற்ற கழகமாக இருக்கும் அந்த கட்சியை ஏ.டி.எம்.கே (அ.தி.மு.க)-வாக மாற்றுவோம். துரோகத்திற்கு நோபல் பரிசு தர வேண்டும் என்றால் அது எடப்பாடி பழனிச்சாமிக்கு தான் தர வேண்டும்.

 

அ.தி.மு.க வில் உள்ள இரண்டாம் கட்ட தலைவர்கள் மெளன விரதத்திலும் தியானத்திலும் இருக்கிறார்கள். டெல்லியிலிருந்து யாராவது வந்து அனைவரையும் சேர்த்து விடுவார்கள் என நம்பி கொண்டுள்ளார்கள். வரும் தேர்தலோடு எடப்பாடி பழனிச்சாமியும் அவருக்கு ஜால்ரா அடிப்பவர்களும் வீழ்ந்து விடுவார்கள், நடக்கப் போவதை பொறுத்திருந்து பாருங்கள்.

எங்கள் கட்சிக்கு நான்தான் வழிகாட்டல் கொடுக்க முடியும் பா.ஜ.க கொடுக்க முடியாது.

 

செங்கோட்டையன் பட்டியலில் அடுத்தடுத்து யார் இணைய போகிறார்கள் என்ற கேள்விக்கு பொருத்திருந்து பாருங்கள்’ என டி.டி.வி. தினகரன் தெரிவித்தார்.

 

இந்த செய்தியாளர் சந்திப்பின்போது, திருச்சி தெற்கு மாவட்ட செயலாளர் செந்தில்நாதன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ராஜசேகர் மற்றும் அமமுக முக்கிய நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.