நீதிமன்றத்தின் உத்தரவை தவறாக புரிந்து கொண்டுள்ளதா திருச்சி மாநகர காவல்துறை. மநீம வழக்கறிஞர் கிஷோர் குமார் .
நீதிமன்றத்தின் உத்தரவை தவறாக புரிந்து கொண்டுள்ளதா திருச்சி மாநகர காவல்துறை.
சமிபத்தில் மாவட்ட நீதிபதி தலைமையில் திருச்சியில் ஒரு ஆய்வு கூட்டம் நடத்தப்பட்டது.. இக்கூட்டத்தில் திருச்சி மாநகர, மாவட்ட காவல்துறையினரால் பதியப்பட்டுள்ள குற்ற வழக்குகளை பொறுத்து விரைந்து விசாரித்து முடிக்க உத்தரவிடப்பட்டுள்ளதாக தகவல் தெரியவருகிறது.
இதனை தொடர்ந்து இரண்டாண்டுக்கு மேல் முதல் தகவல் அறிக்கை நிலையிலேயே உள்ள குற்ற வழக்குகளை சம்மந்தப்பட்ட காவல் துறையினர் பாதிக்கப்பட்ட புகார்தரை அணுகி, மேற்படி புகாரை முடிக்க ஒத்துழைக்க கேட்டு வருவதாகவும், தங்களுக்கு ஒத்துழைக்கவில்லையென்றால் நீதிமன்ற நோட்டிசை கிராம நிர்வாக அலுவலர் வாயிலாக பாதிக்கப்பட்டவர்கள் வீடுகளில் ஒட்டப்படும் என்பது போன்ற மிரட்டல் விடுப்பதாக பாதிக்கப்பட்டவர்கள் வேதனை தெரிவிக்கிறார்கள்.
இவ்வாறு மிரட்டப் படுவது யார் என்றால் தங்களது இரு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனத்தை தொலைத்தவர்கள், தங்களது தங்க நகையை திருடனிடம் பறிகொடுத்தவர்கள், தங்கள் வீட்டில் கொள்ளை போனது தொடர்பாக காவல்துறையில் புகார் கொடுத்து. களவுபோன தங்களது பொருட்களை கண்ணியமிக்க காவல்துறை மீட்டு தருவார்கள் என நம்பும் அப்பாவி பொதுஜனம் தான்.
ஒரு அடிதடி வழக்கு, கொலை, கொலை முயற்சி உள்ளிட்ட வழக்குகளில் எளிதில் விசாரணை முடித்து நீதிமன்றத்தில் இறுதி விசாரணை அறிக்கை காவல்துறையால் தாக்கல் செய்துவிட முடியும்.
இதுவே ஒரு திருட்டு மற்றும் கொள்ளை வழக்கு என்றால் முதலில் திருடிய மற்றும் கொள்ளையடித்த நபரை காவல்துறை கண்டுபிடிக்க வேண்டும். அதனை தொடர்ந்து திருடிய (அ) கொள்ளையடித்த பொருட்களை மீட்க வேண்டும். இது எளிதான காரியமில்லை.
ஆனால் ஸ்காட்லாண்ட் யார்டு போலிசாருக்கு இணையான தமிழக காவல்துறைக்கு இது எளிதானது தான். ஆனாலும் குற்றப்பிரிவில் தொடரும் ஆள் பற்றாகுறையாலும், குற்றப்பிரிவு காவலர்களுக்கு ஒதுக்கப்படும் இதர பணிகளாலும் குற்றப்பிரிவு காவலர்களால் பொதுமக்களுக்கு உதவ முடியாத சூழல் உள்ளது என்பதே நிதர்சனமான உண்மை. இதன் காரணமாக பல குற்றவாளிகள் சுதந்திரமாக சுற்றி திரிகிறார்கள். மேலும் மேலும் தொடர் குற்ற செயலில் ஈடுபட்டு வருவது வேதனை.
மேலும் இது தொடர்பாக இன்றைய 08.10.2025ந் தேதியிட்ட தினத்தந்தி நாளிதழில் விரிவாக செய்தி வெளியாகியுள்ளது குறிப்பிடதக்கது.
எனவே பொதுமக்கள் சிறுக, சிறுக சேமித்த தங்களது இரு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனம் மற்றும் திருடர்களிடம் தாங்கள் பறிகொடுத்த தங்க நகை தொடர்பாக கொடுத்த புகார் மீது காவல்துறை தங்களது பொருட்களை மீட்டு தரும் என்ற பெரும் நம்பிக்கைக்கு, அவநம்பிக்கை ஏற்படுத்தும் விதமாக மாநகர காவல்துறை மேற்கொள்ளும் தற்பொழுதைய பொதுமக்களுக்கு பாதிப்பிற்குள்ளாக்கும் செயலை உடனடியாக கைவிட்டு, பொதுமக்கள் இழந்த பொருட்களை மீட்க சிறப்பு புலனாய்வு குழுக்களை திருச்சி மாநகர காவல் ஆணையர் தலைமையில் ஏற்படுத்தி உரிய நடவடிக்கை எடுக்க மக்கள் நீதி மய்யம் கட்சி, திருச்சி தெற்கு மாவட்டம் சார்பில் வலியுறுத்தி கேட்டுகொள்கிறோம். என மக்கள் நீதி மய்யம் திருச்சி தெற்கு மாவட்ட செயலாளர் வக்கீல்.S.R.கிஷோர்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார் ..